உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூரி ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை துவக்கம்; ஜெய் ஜெகன்னாத் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பூரி ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை துவக்கம்; ஜெய் ஜெகன்னாத் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

ரத யாத்திரை: பூரி ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜெய் ஜெகன்னாத் கோஷத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.


ஒடிசா; ஒடிசாவில் ஒன்பது நாட்கள் நடைபெறும் வருடாந்திர ரத யாத்திரையின் தொடக்கமாக, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூரி கோயிலிலிருந்து பகவான் ஜெகன்னாதர் மற்றும் அவரது இரு உடன்பிறப்புகளின் சிலைகள் தேர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பஹண்டி சடங்கை, இடைவிடாத மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமை கண்டு களித்தனர்.


மணி ஓசைகள், சங்கு மற்றும் தாள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், முதலில் சக்ரராஜ் சுதர்சனம் முக்கிய கோயிலிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, தேவி சுபத்ராவின் தர்ப்பதலன் தேரில் அமர்த்தப்பட்டார். பூரியில் பகவான் ஜெகன்னாதர் வடிவில் வழிபடப்படும் பகவான் விஷ்ணுவின் ஆயுதமான சக்கரமே ஸ்ரீ சுதர்சனம் என்று பண்டிட் சூர்யநாராயண ரத்ஷர்மா கூறினார். பகவான் ஜெகன்னாதரின் மூத்த சகோதரரான பகவான் பலபத்ரரின் சிலையும், அவரது தாளத்வஜா தேருக்குச் செல்லும் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டது. சூனிய பஹண்டி (தேவி தேருக்கு எடுத்துச் செல்லப்படும்போது வானத்தைப் பார்த்தவாறு செல்வது) எனப்படும் சிறப்பு ஊர்வலத்தில், பகவான் ஜெகன்னாதர் மற்றும் பலபத்ரரின் சகோதரியான தேவி சுபத்ராவின் சிலை அவரது தேருக்குக் கொண்டு வரப்பட்டது.


இறுதியாக பகவான் ஜெகன்னாதரின் சிலை கோயிலிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது, ​​பக்தர்கள் கைகளை உயர்த்தி ஜெய் ஜெகன்னாதர் என்று முழக்கமிட்டதால் கிராண்ட் ரோடு பகுதியே உணர்ச்சிப்பெருக்கில் மூழ்கியது. பின்னர் ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. ஜெகன்னாதர் முன்னிலையில் ஒடிசி நடனக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கலாச்சாரக் குழுவினர் தங்கள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.  தேர்கள் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோயிலைச் சென்றடைந்ததும், அங்கு ஒருவார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோயிலை வந்தடைந்ததும் ரத யாத்திரை ஜூலை 24 அன்று நிறைவுபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !