ராஜேந்திர சோழனுக்கு சிலை; கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய குழு ஆய்வு
பெரம்பலுார்: ராஜேந்திர சோழன் சிலை அமைப்பது தொடர்பாக, டில்லி இந்திராகாந்தி தேசிய கலை மைய குழுவினர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆய்வு செய்தனர்.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில், 2025 ஜூலை 27ல் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். கங்கைகொண்டசோழபுரத்தை ஆட்சி புரிந்த ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என, பிரதமர் மோடி அறிவித்தார்.
சிலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, டில்லி இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் நிர்வாக மற்றும் கல்வித்தலைவர் சச்சிதானந்தன் ஜோஷி தலைமையிலான குழுவினர், கங்கைகொண்ட சோழபுரத்தில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழு தலைவர் இன்ஜினியர் கோமகன் கூறியதாவது: தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வளாகத்தில் இருந்து, 300 அடி துாரம் வரை எவ்வித புதிய கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்பது விதி. எனினும், 100 அடிக்கு அப்பால், 9 அடி உயரத்திற்கு உட்பட்ட சிறிய சிலைகள் வைக்கலாம். தொல்லியல் துறையின், 300 அடி கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள சோழகங்கம் எனும் பொன்னேரி கரையில் பிரமாண்ட சிலையை அமைக்க வேண்டும். மாமன்னர் ராஜேந்திர சோழன், 32 ஆண்டுகள் சிறப்புற ஆட்சி செய்ததை நினைவுகூறும் வகையில், சிலையின் உயரம், 32 அடியாக அமைக்கலாம். இல்லாவிட்டால், அதன் விகிதாச்சார அடிப்படையில், 64 அல்லது, 96 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்