திருச்செங்கோடு விநாயகர், செல்லாண்டியம்மன் உள்பட 6 கோவில்களில் கும்பாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஆதிகருமாபுரம், கொங்கு வேளாளர் பொருளீந்தகுல பங்காளிகள், அருள்மிகு செல்லாண்டியம்மன் வகையறா திருக்கோவில்களின் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை, 7:25 மணிக்கு மேல், 9:30 மணிக்குள் நடந்தது. இதில் கொங்கு வேளாளர் பொருளீந்தகுல பங்காளிகள், உறவினர்கள், மக்கள் பங்கேற்றனர்.
எல்லாம் வல்ல அம்பிகை, சிவபெருமானின் திருவருள் துணைகொண்டு, பஞ்ச கிருத்யங்களை செய்கிறாள். பத்ரகாளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, துாமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா எனும் தசமஹாவித்யா என்ற ஆதிபராசக்தி, 10 வித வடிவங்களில், 10 வித பெயர்களில் காட்சி தருகிறாள். இந்த பராசக்தியின், 10 வித வடிவம், திருமாலின், 10 அவதாரங்களுக்கு இணையானது.
ஆதிபராசக்தியின் பத்ரகாளி எனும் செல்லாண்டியம்மன் வடிவம், திருமாளின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதாரத்துக்கு இணையாகவும், நவகிரகங்களில் சனிபகவானின் தோஷங்களை போக்குவதாகவும் போற்றப்படுகிறது. இந்த அன்னையானவள், வெற்றி விநாயகர், செல்லாண்டியம்மன் எனும் திருநாமத்துடன், ஆதிகருமாபுரம் எனும் ஊரில் பொருளீந்தகுல பெருமக்களுக்கு குலதெய்வமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.
இதை போலவே, சிவகாமி அம்பாள் சமேத பாண்டீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள், அத்தனுார் அம்மன், மஹா மாரியம்மன் ஆலயங்களும் உள்ளன.
கடந்த 24ல் வெற்றி விநாயகர் பூஜையுடன் மஹா சங்கல்பம், ப்ராமண அனுக்ஜை சுவாமி அம்பாள் அனுக்ஜை பொருளீந்தகுல மக்கள் நலம் வேண்டி விசேஷ குலதெய்வ பிரார்த்தனை செய்யப்பட்டது. அன்று இரவு கும்பாபிஷேகத்துக்கு கிராம சாந்தி செய்யப்பட்டது.
26ல் கோ பூஜையுடன் மஹா கணபதி பூஜை, கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம், அஸ்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி செய்யப்பட்டது.
27ல் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. 28ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பூஜை தொடங்கி, 4 கால யாக பூஜை நடந்து, இன்று மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
பொருளீந்த குல மக்களின் முயற்சியாலும், நன்கொடைகள் மூலமும் திருப்பணி நடந்தது. தொடர்ந்து இன்று காலை, செல்லாண்டியம்மன் முதற்கொண்டு, 5 கோவில்களுக்கும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் எனும் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.
குறிப்பாக காலை, 7:25 முதல், 8:00 மணிக்குள், அத்தனுார் அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம். அதேபோல், 8:00 முதல், 8:30 மணிக்குள் மாரியம்மன்; பாண்டீஸ்வரர் கோவில்களின் கும்பாபிஷேகம்; 8:30 முதல், 9:00 மணிக்குள், சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்; 9:00 முதல், 9:30 மணிக்குள், வெற்றி விநாயகர், செல்லாண்டியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
இதில் பொருளீந்தகுல பங்காளிகள், பக்தர்கள், ஊர்மக்கள் திரளாக வந்து, கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்து, எல்லாம் வல்ல அம்பிகை, செல்லாண்டியம்மன் திருவருள் பெற்றனர்,