ஜனநாயகன் லீக் ; எடிட்டர் காரணமா... குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ் : ஆர்கே செல்வமணி பேட்டி
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் முழு படமும் லீக் ஆன விவகாரத்தில், படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் மீது பலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். படத்தின் எடிட்டர் தரப்பில் இருந்துதான் படம் லீக் ஆகி இருக்கிறது என்று சிலர் சந்தேகம் தெரிவித்தனர். இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எடிட்டர் சங்க தலைவர் கோபி மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பல முன்னணி எடிட்டர்கள் ஒன்றிணைந்து, சென்னை பெப்சி அலுவலகத்தில் மீடியாவை சந்தித்து பேசினர்.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி
சினிமா டிஜிட்டலாக மாறிய பிறகு படத்தின் காப்பி ஒருவரிடம் மட்டுமே இருப்பது இல்லை. ஜனநாயகன் விவகாரம் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அடித்துள்ளது. அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். எடிட்டர்ஸ் ஒருவேளை தவறு செய்யக் கூடியவராக இருந்தால், தனது வாட்டர் மார்க் லோகோவை எப்படி பதிந்து வெளியிடுவார்கள். உதாரணத்திற்கு வங்கியை கொள்ளையடிக்க கூடியவன் அடையாள அட்டையை விட்டு செல்வானா? காவல்துறை குற்றவாளிகளை நெருங்கி விட்டனர். ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மத்திய அரசு தண்டனை விதித்திருக்கிறது, அந்த தண்டனை அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கப்பெறும். அதேப்போல திரைப்படத்தை இணையத்தில் கசிய விட்டவர்கள். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராவது எங்கள் சங்கத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் இனி சினிமாவிலே இருக்கமாட்டார். இதற்கு துணை போனவர்கள் எங்களது யூனியனில் இனிமேல் வேலை செய்யவே முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும். ஜனநாயகன் பட எடிட்டர் நிரபராதி. அவர் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இது போன்ற குற்றச்சாட்டுகளால் அவர் அழுது கொண்டே இருக்கிறார். படம் 3 மாதம் தாமதமாகி இருப்பதால் இவ்வளவு பிரச்னை என்றார்.
எடிட்டர் சங்க தலைவர் கோபி பேசியது
ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே லீக் ஆனது வருத்தம் அளிக்கிறது. அதற்காக படத்தின் எடிட்டர் பிரதீப் மீது சந்தேகப்படுவது, குற்றம்சாட்டுவது சரியல்ல. அவரிடம் படத்தின் பிரதி இருந்தது உண்மை. அவர் நினைத்து இருந்தால் எப்போதோ இதை விட நல்ல பிரிண்ட்டை ரிலீஸ் செய்து இருக்கலாம். ஒரு படத்தின் பணியாற்றும் யாரும் அப்படி செய்யமாட்டார்கள். பெப்சி தலைவராக இருந்த இயக்குனர் அமீர் கூட அவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்.
முதலில் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. பின்னர் தள்ளிப்போனதால் அந்த படத்தின் சில காட்சிகளை மெருகேற்ற ஐதராபாத்துக்கு பிரிண்ட் அனுப்பப்பட்டது. ஜனநாயகன் 5 மொழிகளில் ரிலீஸ் ஆவதாக இருந்தததால் ஐதராபாத்தில் தான் ஒலி கலவை வேலைகள் நடந்தன. அங்கே லீக் ஆகி இருக்கலாம் என சிலர் சந்தேகப்படுகிறார்கள். எடிட்டர் தரப்பில் படம் கசிய விடப்படவில்லை. படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது.
லீக்கான பிரிண்ட்டில் எடிட்டர் ரெபரன்ஸ் என வாட்டர் மார்க் இருந்ததால் இந்த பிரச்னை. முதலில் ஒரு படம் எடிட்டர் டேபிளுக்குதான் வரும். அவர்தான் அதை சரி செய்து மற்ற டெவலப்மென்ட், மற்ற டெக்னிஷியன்களுக்கு அனுப்புவார். அதனால், அந்த வாட்டர் மார்க் முதலில் இருக்கும். உண்மை தெரியும் வரை யாரையும் பழி சொல்லாதீர். காவல்துறை விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் யார் என்பது அடையாளப் படுத்தப்படுவார்கள்.
நானும் எடிட்டரிடம் பேசி, சில தகவல்களை உறுதி செய்து கொண்ட பின்னரே அவருக்கு ஆதரவாக பேசுகிறேன். அவர் மீது எந்த தவறும் இல்லை. உண்மை விரைவில் வெளியே வரும். எடிட்டருக்கு ஆதரவாக படத்தின் இயக்குனர், படக்குழுவினர், எடிட்டர் சங்க உறுப்பினர்கள் உள்ளனர். வருங்காலத்தில் இப்படி தவறுகள் நடக்காமல் இருக்க, தொழில்நுட்பத்தை, கட்டுப்பாடுகளை பயன்படுத்துவது குறித்தும்எங்கள் சங்கம் விவாதித்து வருகிறது என்கிறார்கள்.
ஜனநாயகன் லீக் குறித்து விசாரித்தால், இந்த படத்தின் பிரதியை ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல ஸ்டூடியோவிற்கு சவுண்ட் மிக்சிங், சில கரெக்ஷனுக்காக அனுப்பியபோது கசிந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதை லீக் செய்து நெட்டில் டவுண்லோடு செய்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதை லீக் செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. சில நாட்களில் அந்த நபர் அல்லது கும்பல் பிடிபடும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜனநாயகன் படத்தின் காப்பியை சில பாதுகாப்பு குறைபாடுள்ள வழிகளில் மற்ற டெக்னீஷியன்களுக்கு அனுப்பியதும் லீக் ஆக காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்னமும் பட லீக் குறித்து விஜய் பேசாததும் படக்குழுவை, மற்றவர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.