'கேஜிஎப் 3' பற்றி அப்டேட் கொடுத்த யஷ்
இந்திய சினிமாவில் பல மொழிகளில் படங்கள் வந்தாலும் கன்னட சினிமா அதிகம் கண்டு கொள்ளப்படாத ஒன்றாக இருந்தது. அதை இந்த திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு திரும்பிப் பார்க்க வைத்த படங்களாக 'கேஜிஎப் 1 மற்றும் 2' ஆகியவை இருந்தது. அதிலும் இரண்டாம் பாகம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது. தமிழ் சினிமா கூட இதுவரையில் 1000 கோடி வசூலைத் தர தடுமாறி வருகிறது. ஆனால், கன்னட சினிமா அதை நான்கு வருடங்களுக்கு முன்பு 2022லேயே கொடுத்துவிட்டது.
இரண்டாம் பாகத்தின் முடிவில் அதற்கடுத்த பாகத்தைப் பற்றிய 'லீட்' ஒன்றும் இருந்தது. ஆனால், நான்கு வருடங்களான பின்னரும் மூன்றாம் பாகம் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல், 'சலார்' படத்தை இயக்கினார். தற்போது ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து 'சலார் 2' படத்தை இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'கேஜிஎப் 3' படம் குறித்த அப்டேட் ஒன்றைத் தந்துள்ளார் யஷ். “உடனடியாக 'கேஜிஎப் 3 உருவாக வாய்ப்பில்லை. நான் 'டாக்சிக்' படம் மற்றும் ராமாயணா 1, 2' படங்களில் பிஸியாக உள்ளேன். நானும் பிரசாந்த் நீலும் அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். மூன்றாம் பாகத்திற்கான சரியான கதை அமைய வேண்டும். அப்படி வந்துவிட்டால் நிச்சயம் 'கேஜிஎப் 3' உருவாகும்,” என்று கூறியுள்ளார்.