ரிஷி கபூரை சமாளித்து கூடுதல் வேலை வாங்கிய ஜீத்து ஜோசப்
மலையாள திரையுலகை பொறுத்தவரை இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளம் மட்டுமல்லாது ஹிந்தியிலும் அவ்வப்போது படங்களை இயக்கி வருகிறார். அவருக்கு அடுத்ததாக இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் ஹிந்தியில் சில படங்களை அவ்வப்போது இயக்கியுள்ளார். தற்போது மோகன்லாலை வைத்து அவர் இயக்கியுள்ள திரிஷ்யம் 3 திரைப்படம் மே 21 இல் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பாலிவுட்டில் படம் இயக்கியபோது நடிகர் ரிஷி கபூரை சமாளித்த விதம் குறித்து சமீபத்திய பேட்டியில் சுவையான தகவல் ஒன்றை கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.
கடந்த 2019ல் ஹிந்தியில் பாடி என்கிற படத்தை இயக்கினார் ஜீத்து ஜோசப். இந்த படத்தில் கதாநாயகனாக இம்ரான் ஹாஸ்மி நடிக்க முக்கிய வேடத்தில் மறைந்த பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் நடித்திருந்தார். அங்கே வழக்கமாக 12 மணிக்கு மேல் தான் படப்பிடிப்பு துவங்கும். எட்டு மணிக்கு மேல் ரிஷி கபூர் படப்பிடிப்பு தளத்தில் இருக்க மாட்டார்.. வீட்டிற்கு கிளம்பி விடுவார்.. ஆனால் ஜீத்து ஜோசப்புக்கு இரவு 12 மணி வரை படப்பிடிப்பு நடத்தினால் தான் குறிப்பிட்ட சமயத்தில் படத்தை முடித்து தயாரிப்பாளரை சிக்கல் இல்லாமல் காப்பாற்ற முடியும் என்கிற நிலை. ஆனால் ரிஷி கபூரிடம் 8 மணிக்கு மேல் பணியாற்ற சொல்லி யார் கேட்பது என்று தயங்குகிறார்கள்.
உடனே ஜீத்து ஜோசப் தானே ரிஷி கபூரிடம் சென்று இன்று 10 மணி வரை உங்களுக்கு வேலை இருக்கிறது. அதை நடித்துக் கொடுத்துவிட்டால் விரைவில் படப்பிடிப்பை முடித்து விடலாம் என்று கூற முதலில் கோபப்பட்டாலும் சரி என்று ஒத்துழைத்து நடித்து கொடுத்தாராம் ரிஷி கபூர். சரியாக 9.55 க்கு சென்று, சார் உங்களுடைய காட்சிகள் இன்று முடிந்தது நீங்கள் கிளம்பலாம்.. ஐந்து நிமிடங்களுக்கு முன்பே நான் சொன்னபடி உங்கள் காட்சியை முடித்து விட்டேன் என்று ஜீத்து ஜோசப் கூற அவரை பாராட்டி விட்டு கிளம்பி சென்றாராம் ரிஷி கபூர்.
முக்கியமான விஷயமே இனிதான் இருக்கிறது.. அதேபோல மறுநாள் படப்பிடிப்பு நடைபெற்றபோது ரிஷி கபூரிடம் இன்று 11 மணி வரை நீங்கள் இருக்க வேண்டும் என்று சொன்னதும் அப்படியா ஓகே என்று கூறி விட்டாராம். அதேபோல மறுநாள் 12 மணி வரை ரிஷி கபூருக்கான வேலை நேரத்தை அதிகரித்தார் ஜீத்து ஜோசப். ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் தான் சொன்ன நேரத்திற்கு தன்னை வீட்டிற்கு அனுப்பி வைத்ததால் ஜீத்து ஜோசப் மீது ரிஷி கபூருக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது. அதனால் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்ததுடன் உங்களுக்காக தான் நான் இப்படி ஒப்புக்கொண்டு நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். படப்பிடிப்பில் பணியாற்றிய மும்பை தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர் கூட ரிஷி கபூரின் இந்த மாற்றம் கண்டு ஆச்சரியப்பட்டு போனார்களாம்.