பிளாஷ்பேக்: காலத்தை வென்றவன்: எம்ஜிஆரை பற்றி ஒரு சினிமா
மக்கள் திலகம் எம்ஜிஆர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரைப் பற்றி வந்த ஒரு சினிமா 'காலத்தை வென்றவன்'. எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு அவரது மனைவி ஜானகி அம்மாளின் ஒத்துழைப்போடு உருவான படம் இது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலான நீளத்தை கொண்ட இந்த படத்தில் எம்ஜிஆர் நடித்த படங்களில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகள், பாடல்கள் இடம்பெற்றது.
அதோடு அவரது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், முதல்வராக ஆற்றிய பணிகள், அவர் மறைந்தபோது நடந்த இறுதி நிகழ்ச்சிகள் இவற்றைக் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இதனை எம்ஜிஆரை வைத்து பல படங்களை இயக்கிய ப.நீலகண்டனின் உதவியாளர் மோகன்காந்தி ராமன் இயக்கினார், பாரத் சினி கிரியேஷன் சார்பில் அவரே தயாரித்தார். அவருடன் மீனா திருநாவுக்கரசு இணை தயாரிப்பாளராக இருந்தார். சங்கர்&கணேஷ் இசை அமைத்தார். எம்ஜிஆர் இறுதி ஊர்வல காட்சியில் இடம்பெற்ற சோக பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி இருந்தார்.
இந்த படம் முழுயான டாக்குமெண்டரியாகவோ அல்லது ஒரு திரைப்படமாகவோ அமையவில்லை. வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே அமைந்ததால் போதிய வரவேற்றை பெறவில்லை.