வசூலை குவிக்கும் மைக்கேல் ஜாக்சன் படம்
உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் படமான 'மைக்கேல்' கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உலக சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை வெளிவந்த பயோபிக் படங்களிலேயே இதுதான் அதிக வசூலை கொடுக்கப்போகும் படம் என்கிறார்கள்.
பாப் உலகின் சக்ரவர்த்தி மைக்கேல் ஜாக்சன் தனது சகோதரர்களையும் உள்ளடக்கிய 'ஜாக்சன் 5' இசைக்குழு மூலம் எப்படி 10 வயதிலேயே புகழ்பெற்று தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்பதே படத்தின் மையக்கரு. வழக்கமான வாழ்க்கை வரலாற்றுக் கதையாக இல்லாமல், மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனாக அவரது சகோதரரின் மகன் ஜபார் ஜாக்சன் நடித்திருக்கிறார். சிறுவயது மைக்கேலாக ஜூலியானா வால்டி நடித்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் உலகளாவிய ஹிட் பாடல்கள் மட்டுமின்றி மைக்கேல் ஜாக்சனின் சில ஆரம்பக்கட்ட பாடல்களையும் இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது படம்.
அன்டோனியா புகுவா இயக்கி உள்ளார், ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார். டியானோ பீபி ஒளிப்பதிவு செய்துள்ளார். யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மால் தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளாக மட்டுமே வெளியாகி உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடியில் தயாராகி இருந்த இந்தப் படம் முதல் 5 நாட்களிலேயே 3 ஆயிரம் கோடி வசூலை தாண்டி உள்ளது.