மீண்டும் தடுமாறும் தியேட்டர்கள்
கோடை விடுமுறை நாட்கள் என்பது தமிழ் சினிமாவில் வருடா வருடம் கிடைக்கக் கூடிய அற்புதமான நாட்கள். ஆனால், இந்த வருடம் அது தமிழ் சினிமாவுக்கு ஆபத்தான நாட்களாகப் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்பாகவே முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவில்லை. அடுத்தக்கட்ட இடத்தில் இருக்கும் நடிகர்களான ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் நடித்த 'மிஸ்டர் எக்ஸ்' படம் மட்டும் வெளிவந்தது. ஆனால், அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. கடந்த வாரம் தனுஷ் நடித்த 'கர' படமும் வெளியாகி தோல்வியைத்தான் சந்தித்துள்ளது.
இன்றும் இரண்டு படங்கள் வெளியானாலும் கடந்த சில நாட்களாகவே தியேட்டர்களில் சொல்லிக் கொள்ளும்படி கூட்டமே இல்லையாம். பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலைக்குப் போய் உள்ளது. அது தற்போதும் தொடர்கிறது என்கிறார்கள். இந்த நிலை இன்னும் ஒரு வாரம் இருக்கக் கூடிய நிலையும் வரலாம் என்பதுதான் சோகம்.
சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அந்தப் படம் மீது ஓரளவு எதிர்பார்ப்பு உள்ளது. அந்தப் படமாவது கோடை விடுமுறையைப் பயன்படுத்தி குடும்பத்தினரை தியேட்டர் பக்கம் வரவழைக்குமா என் தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள்.