உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

'அன்னக்கிளி' படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட பஞ்சு அருணாசலம். இப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. அதேப்போல் இளையராஜாவிற்கு இது 50 ஆண்டுகால இசைப்பயணமாகும். இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்தார் இளையராஜா.

அவர் கூறுகையில், ‛‛உங்களுக்கு தான் 50 ஆண்டுகள். எனக்கு வருடங்களே கிடையாது. இப்போது பால்கியின் தமிழ் படத்திற்கு இசை பணி நடக்கிறது. வருடங்கள் தான் போய்க் கொண்டிருக்கிறதே தவிர நான் அப்படியே, அங்கேயே தான் இருக்கிறேன். நான் எங்கிருந்து வந்தேனோ, இப்போதும் அப்படியே இருக்கிறேன். அதைத்தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. என்னை இசைக் கடவுளாக பார்க்கிறார்கள், பார்த்துவிட்டு போகட்டும்.

நான் இசையமைக்கும் போது எந்த நினைவும் இருக்காது, மன அமைதியை கொண்டு வருவதே இசை. அதை நான் செய்கிறேன். அதனால் தான் மக்கள் என்னை கொண்டாடுகிறார்கள். நான் இல்லாவிட்டாலும் என் இசை மூலம் அந்த கொண்டாட்டம் என்றென்றும் தொடர்ந்து கொண்டு இருக்கும்.

ஜிகே வெங்கடேஷ், எம்எஸ் விஸ்வநாதன், சலீல் சவுத்ரி உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களிடம் நான் இசை வாத்தியங்கள் வாசித்து இருக்கிறேன். 200, 250 படங்களுக்கு உதவி இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தாலும் நான் தனியாக முதலில் இசை அமைத்த போது, எனக்குள் பல கேள்விகள் எழுந்தது. தனிக்காட்டில் விட்டது போன்று இருந்தது. பல நாட்கள் பயிற்சிக்கு பிறகே அன்னக்கிளி பாடல்கள் வந்தது. யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. ஒவ்வொரு சூழலையும் நான் புரிந்து ஆத்மார்த்தமாக இசையை தருகிறேன். இப்படித்தான் ஒவ்வொரு பாடல்களையும் நான் தருகிறேன். அதனால் தான் அந்த இசை இன்றும் உயிரோடு இருக்கிறது, அது உங்களது ஆத்மாவாக மாறிவிட்டது''.

இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Karuppiah Vellaian
2026-05-14 21:51:49

Raaja “The Great”