உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆதவ் அர்ஜூனா, ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி சந்திப்பு ஏன்?

ஆதவ் அர்ஜூனா, ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி சந்திப்பு ஏன்?

ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் நிர்வாகி செண்பகமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மிக முக்கியமான புள்ளியாக இருந்தார். ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் படங்கள், ரெட் ஜெயன்ட் விநியோகம் செய்யும் படங்கள் மற்றும் பல படங்களுக்கு தியேட்டர் பிடித்துக் கொடுப்பது, பட ரிலீஸ் சிக்கல்களுக்கு உதவுவது என பல வகைகளில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருந்தார். இவர் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சமீபத்தில் சந்தித்த போட்டோ இணையதளத்தில் வைரலானது.

என்ன நடக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது குறித்து விசாரித்தால், கடந்த பல ஆண்டுகளாகவே ரெட் ஜெயின்ட் செண்பகமூர்த்தி விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ளவர். குறிப்பாக மாரத்தான் தடகள விளையாட்டு போட்டிகளில் கலந்து பரிசுகளை வெல்பவர். அந்த வகையில் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பல ஆண்டுகளாக நன்கு தெரியும்.
மேலும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குடும்ப நண்பர்கள் வகையிலும் தனிப்பட்ட முறையிலும் முன்பே ஆதவ் அர்ஜுனாவுடன் நல்ல நட்பு உண்டு. அந்த வகையில் ஒரு விளையாட்டு துறை கூட்டத்தில் அவரை சந்தித்து சால்வை அணிவித்தார். இது நட்பு ரீதியான சந்திப்பு, சினிமா சார்ந்த தொழில் சந்திப்பு அல்ல, என அவர் தரப்பு கூறுகிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை இப்பொழுது முன்னாள் துணை முதல்வர் உதயநிதி மகன் இன்பன் உதயநிதி நிர்வாகி ஆக இருந்து நடத்தி வருகிறார்.

இதுப்பற்றி செண்பகமூர்த்தியிடம் கேட்டதற்கு, 'நேரு விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு சம்பந்தமான ஒரு கூட்டத்தில் அவரை சந்தித்தேன். மற்றப்படி தனிப்பட்ட முறையிலான சந்திப்பு அல்ல, வேறு எதுவும் பேசவில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !