உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம்

இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம்


நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி, சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் கிராமத்தில் நடந்த கம்யூனிஸ்ட் விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது, ''நடிகர் விஜயின் வருகை சுனாமியை போல் ஆகிவிட்டது. பணம், ஜாதி, மதம், அகங்காரம் கடந்த தேர்தலில் உடைக்கப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது எல்லா கட்சிகளிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, காசே தராத ஒருவருக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்களே ஆகச்சிறந்த அறிவாளிகள் என்று காட்டிவிட்டார்கள்.

தேர்தல் என்ற சுனாமி, அடித்துச் சென்ற போக்கில் சில நல்ல மனிதர்களையும் சேர்த்தே தூக்கிச் சென்றுவிட்டது. குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின், அண்ணன் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் தோல்வி எனக்கு மிகுந்த கஷ்டத்தை அளித்தது. அதேபோல், அண்ணன் சீமானின் தோல்வியும்... அவரது கட்சியிலிருந்து ஒரு சிலராவது சட்டசபைக்குள் சென்றிருக்கலாம். அண்ணன் திருமாவளவன் மற்றும் தம்பி அண்ணாமலை ஆகியோரும் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளே சென்றிருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது'' என்றெல்லாம் பேசியிருந்தார்.

இது வைரலான நிலையில், ஒருபக்கம் அவரது கருத்துக்கு எதிர்கருத்தும் சிலர் முன்வைத்தனர். இது தொடர்பாக நாம் சமுத்திரக்கனியிடம் தொடர்புகொண்டபோது அவர் கூறியதாவது: என் சொந்த ஊரான சேத்தூரில் இருந்த எஸ்.பி.செல்லப்பிள்ளை என்ற கம்யூனிஸ்ட் காரர் தான் எனக்கு கம்யூனிச சிந்தனையை விதைத்தார். எனக்கு குருநாதர் மாதிரி. 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரின் படத்திறப்பு விழாவில் தான் பங்கேற்று பேசினேன். இதோடு பேசுவதை நிறுத்தப்போகிறேன். கொஞ்ச நாளைக்கு மவுனமாக இருக்கப்போகிறேன். அன்று பேச வேண்டிய சூழல் இருந்ததால் பேசினேன். இனி மவுனமாக இருந்து நடக்கும் சம்பவங்களை பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !