ரஜினி, கமல் எனும் இரு சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய பாரதிராஜா
தமிழ் திரையுலகின் தனிப்பெரும் ஆளுமைகளில் ஒருவராக பார்க்கப்படும் இயக்குநர் பாரதிராஜா, இந்தியத் திரையுலக அரங்கத்திற்குள் தமிழுக்கென ஒரு தனி சிம்மாசனம் அமைத்து தந்தவர். அவரால் அறிமுகம் செய்யப்பட்ட திரைக்கலைஞர்கள் ஏராளம், ஏராளம். அவர்கள் இன்று தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் பிரபலமான கலைஞர்களாக உள்ளனர்.
பரட்டை - சப்பாணி
நடிகர்கள் ரஜினி, கமலை அறிமுகம் செய்தது கே பாலசந்தர் என்றாலும் அவர்களை சூப்பர் ஸ்டார்களாக ஆக்கியது பாரதிராஜா என்றால் மிகையல்ல. அவர் இயக்கிய முதல் படமான ‛16 வயதினிலே' படத்தில் ரஜினி, கமல் என இரு பெரும் ஸ்டார்களை நடிக்க வைத்து அசத்தினார். அதிலும் நடிகர் கமல்ஹாசனை சப்பானி என்ற கேரக்டரில் கோவணம் கட்டி நடிக்க வைத்தார். அதேப்போல் ரஜினியை பரட்டை என்ற வில்லன் கேரக்டரில் நடிக்க வைத்தார்.
இந்த படங்களுக்கு பிறகு தான் ரஜினி, கமல் இருவரும் சூப்பர் ஸ்டார் நடிகர்களாக உயர்ந்தனர். ரஜினி, கமல் என்ற நடிகர்கள் பெயர் தாண்டி அவர்கள் நடித்த கேரக்டர்களான பரட்டை, சப்பானி என பேச வைத்த பெருமையும் பாரதிராஜாவிற்கு உண்டு. ஒருக்கட்டத்தில் இருவரும் தனித்தனியாக பயணிக்க தொடங்கினார். பின்னாளில் இவர்கள் இருவரையும் தனித்தனியாக படங்களில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. கமலை வைத்து ‛சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக்' ஆகிய படங்களையும், ரஜினியை வைத்து ‛கொடி பறக்குது' என்ற படத்திலும் நடிக்க வைத்தார்.
‛R' எழுத்தும் பாரதிராஜா நாயகிகளும்
பொதுவாக சினிமாவில் நடிகைகள் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் பாரதிராஜா தனது படங்களின் கதாநாயகிகளை அப்படி தேர்வு செய்தது இல்லை. வெள்ளையாக இருப்பவர்களை விட மாநிறத்தில் உள்ள நடிகைகளை தான் தனது படத்தில் அறிமுகம் செய்தார்.
அவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகள் பின்னாளில் தமிழ் சினிமாவை மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வந்தனர். அவர்களில் ராதிகா, ராதா, ரேவதி, ரதி அக்னிஹோத்ரி, ரேகா, அருணா, விஜயசாந்தி, ரஞ்சனி, சுகன்யா, ரஞ்சிதா, பிரியாமணி ஆகியோரை குறிப்பிட்டு சொல்லலாம். தனது படங்களின் நாயகிகளுக்கு ‛R' என்ற பெயர் வைத்தே அறிமுகம் செய்தார். ராதா, ராதிகா, ரேவதி, ரதி ஆகியோரை சொல்லலாம்.
நடிகர்கள்
பாரதிராஜா தான் இயக்கிய படங்களுக்கு ஏற்றபடி தான் ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்தார். அவரது படங்களில் ரஜினி, கமல் போன்ற ஸ்டார் நடிகர்கள் நடித்தாலும் பல படங்களில் புதியவர்களை தான் அறிமுகம் செய்தார். அப்படி அவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் பின்னாளில் பேசப்படும் நடிகர்களாக மாறினர்.
கார்த்திக், தியாகராஜன், பாண்டியன், ராஜா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, நெப்போலியன், மகன் மனோஜ் ஆகியோர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டனர். என் உயிர் தோழன் படத்தில் ஹீரோவாக நடித்த பாபு இவரால் அறிமுகம் செய்யப்பட்டார். அடுத்த படத்திலும் இவர்கள் கூட்டணி இணைந்தது. அந்த படத்தின் ஸ்டன்ட் காட்சியில் தவறி விழுந்து பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த பாபு சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
பாரதிராஜாவின் சிஷ்யர்கள்
இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்த கே பாக்யராஜ், நடிகர், இயக்குனர் என அசத்திய மணிவண்ணன், இவரைப் போலவே நடிகராகவும், இயக்குனராகவும் அசத்திய மனோபாலா, சித்ரா லட்சுமணன், கே ரங்கராஜ், பொன்வண்ணன், மனோஜ் குமார், சீமான் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
பி கண்ணன்
பாரதிராஜாவின் படங்களுக்கு காட்சி அமைப்பு மூலம் ஒளியை தந்தவர் ஒளிப்பதிவாளர் பி கண்ணன். இவரின் அனேக படங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவு செய்தார்.