உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதிராஜா மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல்

பாரதிராஜா மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல்

இயக்குனர் பாரதிராஜா (84) இன்று காலமானார். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை குஷ்பு

நமது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய புகழ்பெற்ற மாற்றுப்பாதை இயக்குனர், அய்யா பாரதிராஜா அவர்கள் நம்முடன் இனி இல்லை என்பதை அறிந்து நெஞ்சம் கலங்கி நிற்கிறேன். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்குப் பேரிழப்பாகும், ஒரு கருமேகம் சூழ்ந்தது போன்ற சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமாவின் மைல்கற்கள்; அவைதான் இனிவரும் காலங்களிலும் திரைப்படக் கலையின் உண்மையான பாடசாலைகளாக விளங்கும். ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

​நான் இரண்டு சடை பின்னிக் கொண்டு நடிப்பது போல ஒரு படம் பண்ணலாம் என்று அவர் என்னிடம் எப்போதும் கூறுவார். அது இனி நிறைவேறாத ஒரு கனவாகவே எஞ்சியிருக்கும். உங்களை மிகவும் தவறவிடுவேன் ஐயா. ​உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

நடிகர் கவுண்டமணி

பதினாறு வயதினிலே படம் தொடங்கி சிவப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், புதிய வார்ப்புகள் என இயக்குனர் பாரதிராஜா இயக்கிய பல படங்களில் நான் நடித்துள்ளேன். 16 வயதினிலே படத்தில் எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா. அவர் மாபெரும் கலைஞர் அவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கவர்னர் அர்லேகர்

இயக்குனர் பாரதிராஜா படைப்புகள் அழியா தடம் பதித்தவை


முன்னாள் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய 'இயக்குநர் இமயம்' திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் ஆர்கே செல்வமணி

இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரை உலகில் சூரியனாக இருந்தவர். அவர் மறைவு எங்களுக்கு பெரிய இழப்பு. அவரை அரசு மரியாதையுடன் அனுப்ப வேண்டும், அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்த வேண்டும்.

நடிகர் ராமராஜன்

எக்காலமும் போற்றும் உயிரோடு ஒன்றிய திரைக்காவியம் படைத்த எங்கள் இயக்குனர் இமயத்திற்கு கண்ணீர் அஞ்சலி!

பாமக தலைவர் அன்புமணி

இயக்குனர் இமயம் என்று போற்றப்பட்ட பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் பாரதிராஜா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜா அவர்களை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அவர் படைத்த புதுமைகளும், சாதனைகளும் ஏராளமானவை. தேனி அல்லிநகரத்திலிருந்து திரைத்துறை குறித்த ஏராளமான கனவுகளுடன் வந்த பாரதிராஜா அவை அனைத்தையும் நனவாக்கினார்.

நீரோட்டத்துடன் பயணித்தால் தான் வெற்றி எளிது என்ற இலக்கணத்தைத் தகர்த்த பாரதிராஜா, படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே அடங்கிக் கிடந்த திரைப்பட உருவாக்கத்திற்கு விடுதலை கொடுத்து, கிராமங்களுக்கு கொண்டு சென்றார்; நாயகனும், நாயகியும் அழகாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை உடைத்து மிகச் சாதாரணமானவர்களையும் நாயக, நாயகிகளாக்கி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா.

இன்று காலை கிடைத்த அவரது மறைவுச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திரையுலகில் தமக்கென தனி வம்சத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அவர். தமிழ்த் திரையுலகம் வாழும் வரை இந்த மாபெரும் திரைக்கலைஞர் போற்றப்படுவார். இயக்குனர் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



நடிகர் மோகன்லால்


மண்ணில் கவிதையையும், மவுனத்தில் உண்மையையும், ஒவ்வொரு காட்சியிலும் ஆன்மாவையும் கண்டறிந்த ஒரு இயக்குனர் அவர். 'தொடரும்' திரைப்படத்தில் பாரதிராஜா அவர்களுடன் இணைந்து நடித்தது, நான் என்றென்றும் போற்றும் ஒரு பெருமையாகும். அமைதியில் துயில்கொள்ளுங்கள் ஐயா. உங்கள் கலைப்படைப்புகள் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும்; அதேவேளையில், உங்கள் இல்லாமை ஆழமாக உணரப்படும்.
நடிகை ரேவதி

நான் நடிகையாக இருப்பதற்கு காரணமானவர். இயக்குனர் பாரதிராஜா.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

அன்பின் அப்பா மறைந்துவிட்டார் என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. சினிமாவில் தனது தொடக்க காலத்திலிருந்து ஒவ்வொரு தடைக்கற்களையும் உடைத்து சாதனைகளாக மாற்றிக்கொண்ட மாமனிதர். எச்சூழ்நிலையிலுமிருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுவார்.

இப்போதும், இவ்வுடல் நிலையின் இயலாமையை முறியடித்து நீண்டு வாழ்வார் என்று நினைத்திருந்தேன். என் மனம் சிதறச் சிதற சிறகடித்துப் பறந்துவிட்டீர்களே அப்பா. எத்தனை உயரம் தொட்டவராக இருந்தும் எனக்கென ஒரு தனிச் சிரிப்பு, தனித் தோழமை, தன் கிரீடம் தொலைத்த அன்பனாய் பழகினீர்களே?! உயிராய் இருந்தீர்களே?!

இப்படிக் கடந்து போவீர்கள் என எண்ணிப் பார்க்கவே இல்லை. இறை மடியில் இளைப்பாருங்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சினிமா உறவுகள், அவரை நேசிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் ஆறுதலைப் பகிர்ந்துகொள்கிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.

நடிகர் சிபிராஜ்

பாரதிராஜா அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். ஐயா, உங்கள் திரைப்படங்கள் திரைப்பட உருவாக்கக் கலைக்கான ஒரு சிறந்த பாடப்புத்தகமாகத் திகழ்ந்தன. கிராமப்புறத் தமிழகத்தின் ஆன்மாவைத் திரையில் கொண்டு வந்த நீங்கள், தமிழ் சினிமாவின் போக்கையே என்றென்றும் மாற்றியமைத்தீர்கள். திரைத்துறைக்கு இது ஒரு பேரிழப்பு. அமைதியில் துயில்கொள்ளுங்கள் ஐயா.

கனிமொழி, திமுக எம்.பி.,

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெரும்பான்மையினரின் யதார்த்தவாத குரல்களை திரையில் பதிவு செய்த அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், திரையுலகினர் அவைருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

நடிகர் சாந்தணு

தமிழ் சினிமாவிற்கு ஆன்மாவை அளித்த ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்; ஆனால், அவரது தடம் வரும் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும். தாங்கள் உருவாக்கிய அந்தத் திரைச் சித்திரங்களிலேயே அமைதி கொள்ளுங்கள், பாரதிராஜா சார்.

இயக்குனர். நடிகர் சித்ரா லட்சுமணன்

முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாரதிராஜா முழுக்க முழுக்க புது முகங்கள் நடிக்க கிழக்கே போகும் ரயில் என்ற பெயரில் தன் இரண்டாவது படத்தை உருவாக்கினார். தியாகராஜ பாகவதரின் 'ஹரிதாஸ்' படத்துக்கு பின்னாலே மிக அதிக நாட்கள் ஓடிய பெருமையை அந்தப் படம் பெற்றது.

அந்தப் படத்தை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய ஒவ்வொரு படமும் தனி ரகம். எண்ணிலடங்காத நட்சத்திரங்களை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர். நட்சத்திரங்கள் மட்டுமல்லாது பல தொழில் நுணுக்க கலைஞர்களை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

தென்னிந்திய சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்த இயக்குனர் இமயம் என்று நம்மிடையே இல்லை. அவரது நினைவை போற்றுகின்ற விதத்திலே ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிகின்ற திரைக் கலைஞரை தேர்ந்தெடுத்து அவருக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பெயரிலே ஒரு விருதினை தமிழக முதல்வர் வழங்க வேண்டும் என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தர்

'என் இனிய தமிழ் மக்களே'... என்று தன் கரகரத்த குரலால் ரசிகர் பெருமக்களை கட்டிப்போட்ட அந்த தென்பாண்டி சிங்கமாம், தேனி பக்கத்துல இருந்து வந்த தங்கமாம், தமிழ் திரை உலகத்தின் தலையாய அங்கமாம், இயக்குனர் இமயமாம் ஐயா பாரதிராஜா அவர்களுடைய மறைவு மனதை வாட்டுகின்றது.

16 வயதினிலே படத்திலே மயிலை படைத்தவர். கிழக்கே போகும் ரயிலில் ரயிலை குயிலாய் கூவி அழைத்தவர். புதிய வார்ப்புகளை வார்த்தவர். சிகப்பு ரோஜாக்களை விதைத்தவர். நிறம் மாறாத பூக்களாய் நிலைத்து நின்றவர். மண்வாசனையை பரப்பியவர். கிழக்கு சீமையிலே என்று கிளர்ந்தெழுந்து நின்றவர். முதல் மரியாதையை கண்டவர். தமிழ் திரை உலகத்தின் தலையாய மரியாதையை வென்றவர். அவருடைய மறைவு செய்தி மனதை ஈட்டி போல் தாக்குகின்றது. நெஞ்சம் தாங்கவில்லை. எப்படி தாங்குவது என்றே தெரியவில்லை. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் திரை உலகத்து ரசிக பெருமக்களுக்கும், தென்னிந்திய ரசிக பெருமக்களுக்கும், அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும், என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

ஆந்திர துணை முதல்வர், நடிகர் பவன் கல்யாண்

இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பாரதிராஜா தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார். கிராமப்புறச் சூழல், கிராம மக்களின் வாழ்க்கை, காதல் மற்றும் பதின் பருவத்தினரின் ஈர்ப்புகளைக் காட்டுவதில் அவரது பாணி தனித்துவமானது. அவர் இயக்கிய தெலுங்கு திரைப்படமான 'சீ தாகோகச் சிலுகா' இன்றும் பார்க்கத் தகுந்தது. அப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

எனது மூத்த சகோதரர் சிரஞ்சீவியுடன் இணைந்து 'ஆராதனா' திரைப்படத்தை உருவாக்கினார். அதில், 'அரே ஏமைந்தி...' என்ற பாடல் மிகவும் பிரபலமானது. உணர்வுபூர்வமான காதல் மற்றும் சென்டிமென்ட் கதைகளைத் தவிர, 'எர்ர குலாபிலு' மற்றும் 'டிக் டிக் டிக்' போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலமாகவும் அவர் பார்வையாளர்களைக் கவர்ந்தார். பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி

இந்தியத் திரையுலகம் தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்துவிட்டது. கிராமத்து மண்ணின் மணம், மனித உறவுகளின் அழகு, காதலின் தூய்மை மற்றும் சாமானிய மக்களின் உணர்வுகள் ஆகியவற்றை அவர் காலத்தால் அழியாத திரைக்கவிதைகளாக மாற்றினார். அவரது திரைப்படங்கள் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டதோடு, பல தலைமுறைத் திரைப்படப் படைப்பாளிகளுக்கு உத்வேகமாகவும் அமைந்தன.

மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது மற்றும் பல தேசியத் திரைப்பட விருதுகளை வென்ற பாரதிராஜா அவர்களின் இந்தியத் திரையுலகப் பங்களிப்பு அளப்பரியது. 'ஆராதனா' திரைப்படத்தில் 'புலி ராஜு' என்ற கதாபாத்திரத்தில் அவரது இயக்கத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். சினிமா மீதான அவரது தீராத ஆர்வம், எளிமை மற்றும் தனது கலைப்பணியின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை என் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தின.

அவர் நம்மிடையே இல்லையென்றாலும், அவரது அற்புதமான திரைப்படங்கள் வாயிலாக அவரது கலை வாரிசு என்றென்றும் நிலைத்திருக்கும். இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களே, அமைதியில் துயில்கொள்ளுங்கள். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குனர் செல்வராகவன்

நம் இழப்பை சொல்ல வார்த்தை இல்லை !

நடிகர் யோகிபாபு

தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஐயாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனித்துவமான கதை சொல்லாலும், மண்ணின் மணம் வீசும் படைப்புகளாலும் தமிழ் சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர். அவர் படைத்த கதைகளும், கதாபாத்திரங்களும், திரைப்படங்களும் என்றும் காலத்தால் அழியாதவை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !