பிளாஷ்பேக்: கமலுக்கு முன்பே வேட்டையாடி விளையாடிய அர்ஜுன்
கமல் நடித்த முக்கியமான ஆக்ஷன் படங்களில் ஒன்று 'வேட்டையாடு விளையாடு'. 2006ல் வெளிவந்த இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கி இருந்தார். ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தூய தமிழில் டைட்டில் வைக்கும் வழக்கத்தை கொண்டிருந்த கவுதம் மேனன் புகழ்பெற்ற எம்ஜிஆர் பாடலான 'வேட்டையாடு விளையாடு, விரும்பம் போல உறவாடு' என்ற பாடலில் இருந்து டைட்டில் எடுத்திருந்தார்.
ஆனால் இந்த டைட்டிலில் முதலில் நடித்தது அர்ஜுன். 1989ம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த படத்தில் அர்ஜூன் நாயகனாக நடித்திருந்தார். அவரது ஜோடியாக சீதா நடித்திருந்தார். அண்ணனாக நிழல்கள் ரவியும், அண்ணியாக குட்டி பத்மினியும், வில்லனாக ஆனந்தராஜும் நடித்திருந்தார்கள். கோவை சரளா, எஸ்.எஸ்.சந்திரன் காமெடியாக நடித்திருந்தனர். ராஜா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார்.
போலீசான அண்ணன் குடும்பத்திற்கு எதிரிகளால் வரும் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றும் தம்பியின் கதை. இதில் தம்பி அர்ஜுன் வாடகை கார் டிரைவராக நடித்திருந்தார். ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என கலவையாக படம் தயாராகி இருந்தாலும் வெற்றி பெறவில்லை.