பிளாஷ்பேக்: திரை எழுத்தாளராக மட்டும் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜேஷ்வர்
'அவள் அப்படித்தான், பன்னீர் புஷ்பங்கள், ஏழாவது மனிதன், மீண்டும் ஒரு காதல் கதை, துளசி, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி' ஆகியவை தமிழ் சினிமாவின் முக்கியமான படங்கள். இந்த படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ராஜேஷ்வர். ஒரு கட்டத்தில் இயக்குநராக மாறி 'நியாயத்தராசு, இதயத் தாமரை, அமரன், துறைமுகம், அதே மனிதன், கோவில்பட்டி வீரலட்சுமி, இந்திரவிழா' படங்களை இயக்கினார். இதில் 'அமரன்' தவிர மற்ற படங்கள் உரிய வரவேற்பை பெறவில்லை.
சிம்ரன் நடித்த 'கோவில்பட்டி வீரலட்சுமி' 2003ல் வெளியாகி வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. 2007ம் ஆண்டில் 'மல்லிகை மலரே' என்ற பெயரில் ஒரு படத்தை அறிவித்தார். அப்படத்தில், நமீதா 5 வேடங்களில் நடிக்கிறார் என விளம்பரம் செய்யப்பட்டது. பின்னர் இந்த படம் டிராப் ஆனது. ஸ்ரீகாந்த், நமீதா நடித்த 'இந்திரவிழா' வெற்றி பெறவில்லை.
'அஜப் பிரேம் கி கசாப் கஹானி' என்ற இந்தித் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதினார். அப்படத்தின் தமிழ் மறு ஆக்கமாக 2010ம் ஆண்டில், 'திடீர் நகரில் ஒரு காதல் கானா' என்ற பெயரிலான படத்தில் தனது மகன் ரஞ்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க தான் இயக்க இருப்பதாக அறிவித்தார். படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கியது, இந்த படமும் டிராப் ஆனது.
2015ம் ஆண்டில், கார்த்திக் நடித்த அமரனின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகத்தை தொடங்கினார். கார்த்தியின் உடல்நிலையால் அந்த படமும் கைவிடப்பட்டது. கடைசியாக காமெடி நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சித்தார், அதுவும் நடைபெறவில்லை. எழுத்தாளராக ஜெயித்த இரஜேஷ்வரால் ஒரு இயக்குனராக வலுவான வெற்றியை பெறமுடியாமல் போனது.