உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''என் ஓடாத படங்கள் எல்லாமே...'': புகழிடம் அஜித் சொன்ன காமெடி

''என் ஓடாத படங்கள் எல்லாமே...'': புகழிடம் அஜித் சொன்ன காமெடி


நடிகர் அஜித்குமார், 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தப்படம் பற்றி அறிவிப்பு இன்னும் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த 'வலிமை' படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் சின்னத்திரையில் இருந்து சினிமா வந்த புகழ்.

இதுப்பற்றி யுடியூப் சேனல் ஒன்றிற்கு புகழ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 'வலிமை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதே நேரத்தில் மும்பையில் ஒரு தனியார் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருந்தேன். இதனால், அஜித் சாருடன் நடிக்க முடியாமல் போய்விட போகிறது என பயந்தேன். அந்த ஷோவில் டைட்டில் வின்னராக வெற்றிப்பெற்ற அதேநாளில் எனக்கு வலிமை படக்குழுவில் இருந்து அழைப்பு வந்தது. படப்பிடிப்பு 2 நாட்கள் தள்ளிப்போகியுள்ளதாகவும், நீங்கள் வருகிறீர்களா என்றும் கேட்டனர்.

நான் சம்மதித்ததும், உடனே மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு விமான டிக்கெட் போட்டனர். அங்கு சென்றதும் என் கண்கள் சிவப்பாக இருந்ததை பார்த்த அஜித், ஏன் என கேட்டார். ஷோ முடித்து உடனடியாக அப்படியே வந்ததாகவும், ஓய்வில்லை என்றும் சொன்னேன். உடனே, சரி நீங்கள் சற்று தூங்கி ரெஸ்ட் எடுங்கள், நார்மல் ஆனதும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம் என அஜித் சொன்னார். நான் ஓய்வு எடுத்து திரும்பிய பிறகே எனக்கான காட்சிகளை அன்று காத்திருந்து படமாக்கினர். அவருடன் நடித்தது வேற லெவல். அவர் செம மனுஷன்.

மேலும், நான் அஜித்திடம், 'சார் காமெடி படம் பண்ணலாமே, நானும் உங்களுடன் நடிக்கிறேன்' எனக் கேட்டேன். அதற்கு, 'நிறைய பண்ணிருக்கேனே புகழ்' என்றார். 'என்ன படம் சார் பண்ணிருக்கீங்க' என ஆச்சரியமாக கேட்ட என்னிடம், 'என் ஓடாத படங்கள் எல்லாமே காமெடி படங்கள் தானே' என்றார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !