ரன்பீர் கபூர் படப்பிடிப்பில் தொழிலாளி உயிரிழப்பு : 40 லட்சம் இழப்பீடு அறிவிப்பு.
பாலிவுட்டில் பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது 'லவ் அண்ட் வார்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுசல். இதில் நடிக்கின்றனர். சமீபத்தில் மும்பையில் உள்ள பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அதில் பணியாற்றிய 42 வயதான சந்திரபான் சிங் யாதவ் என்கிற லைட்மேன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக சஞ்சய் லீலா பன்சாலி மீது குற்றம் சாட்டியுள்ள அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், கண்டனம் தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியது.
இந்த நிலையில் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி புரொடக்ஷன் நிறுவனம், உயிரிழந்த சந்திரபான் சிங் யாதவின் குடும்பத்திற்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனாலும் சங்கத்தின் தலைவர் இந்தத் தொகை போதாது என்று கூறி கூடுதல் இழப்பீட்டிற்காக வலியுறுத்தி வருகிறார். இதற்கு முன்னதாக, கடந்த 2002ல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'தேவதாஸ்' படப்பிடிப்பில் ஒருவரும், 2016-இல் 'பத்மாவத்' படப்பிடிப்பின்போது ஒரு தொழிலாளியும் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..