அனிஷ்மாவின் 'மொத ராத்திரி'
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படம் 'மொத ராத்திரி'. இதில் 'சிறை', மற்றும் 'யூத்' படங்களின் மூலம் புகழ்பெற்ற அனிஷ்மா நடிக்கிறார். அவருடன் ரிஷிகாந்த், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி. எல்.வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்கிறார். பரத் சங்கர் இசை அமைக்கிறார். ராஜா கருப்பசாமி இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “வழக்கத்திற்கு மாறான ஒரு திருமண விழாவை மையமாகக் கொண்ட படம். எதிர்பாராத திருப்பங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் நிறைந்த ஒரு முக்கியமான இரவில் இக்கதை விரிகிறது. புதிய தொடக்கத்திற்கான கொண்டாட்டமாகத் தொடங்கும் நிகழ்வு, விரைவிலேயே குழப்பம் மற்றும் நிச்சயமற்ற சூழலாக மாறுகிறது. அந்த இரவு சம்பந்தப்பட்ட அனைவரின் வாழ்க்கையையும் அடியோடு மாற்றியமைக்கும் ஒரு திருப்புமுனையாக அமைகிறது; தற்போது இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்”, என்றார்.