உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 96வது பிறந்தநாள்... பெண்களை கொண்டாடிய, பெண்கள் கொண்டாடும் கே.பாலசந்தர்

96வது பிறந்தநாள்... பெண்களை கொண்டாடிய, பெண்கள் கொண்டாடும் கே.பாலசந்தர்

இயக்குனர் கே.பாலசந்தரின் 96வது பிறந்தநாள் இன்று. கைலாசம் பாலச்சந்தர் என்ற பெயருடைய கே.பி என அழைக்கப்படும் இவர் 1930ம் ஆண்டு ஜூலை மாதம் 09 ம் நாள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தார். அரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டே நாடகங்களை எழுதி இயக்கி வந்தார். 'மேஜர் சந்திரகாந்த்', 'எதிர் நீச்சல்', 'நாணல்', 'வினோத ஒப்பந்தம் போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற அவரின் நாடகங்கள். எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்தின் மூலம் சினிமாவில் வசனகர்த்தாவாக என்ட்ரி ஆனார்.



1965ம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்திருப்பார். இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 100 படங்களை இயக்கியவர். 4 தேசிய விருதும், இந்திய சினிமாவில் உயர்ந்த விருதான தாதா சாகேப் விருதும் பெற்றார். நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார்.

பொதுவாக பாலசந்தர் படங்களில் வரும் பெண்களின் கேரக்டர்கள், கதை நாயகிகளின் கேரக்டர், அவர்களின் குணம், அவர்கள் சொல்ல வரும் விஷயங்கள், அவர்கள் பேசும் வசனங்கள், அந்த கேரக்டர் செய்த புரட்சி, அந்த கேரக்டர் சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்றும் பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. சில சமயம் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. அப்படி பெண்களை கொண்டாடிய கே.பாலசந்தர் படங்கள் சிலவற்றை பார்க்கலாம்...

அரங்கேற்றம் (1973) - லலிதா




ஏழ்மைச் சூழலில் வாழும் ஒரு ஆச்சாரமான குடும்பத்தின் மூத்த மகள், தன் குடும்பத்தைக் காப்பாற்ற பாலியல் தொழிலுக்குச் செல்லும் துணிச்சலான கதை. அந்த காலத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்த படம். வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் லலிதா ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்து இருந்தார். ஒரு ஜாதியாக பின்னணியில் இப்படிப்பட்ட கேரக்டரா என கடும் விமர்சனங்கள் எழுந்தபோது, சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக குடும்பத்தை கொண்டு கதை எழுதினேன். கற்பனையை விட உண்மை வித்தியாசமாக இருக்கும். நான் உண்மையை சொல்ல அஞ்சவில்லை என பதில் சொன்னார் பாலசந்தார். ஒரு விலைமகள் கதை என்றாலும், இன்றும் அரங்கேற்றம் அவரின் விலைமதிப்பில்லாத கதை.

அவள் ஒரு தொடர்கதை (1974) - கவிதா



1974ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி 52 ஆண்டுகள் ஓடிவிட்டாலும் அதில் கவிதா கேரக்ரில் வரும் சுஜாதா நடிப்பை, அந்த கேரக்டர் மூலமாக சமூகத்துக்கு பாலசந்தர் சொன்ன விஷயங்களை மறக்க முடியாது. குடும்பத்திற்காகத் தன் சொந்த ஆசைகளைத் தியாகம் செய்து ஒரு பெண்ணின் கதை தான் அவள் ஒரு தொடர்கதை எனலாம். அதில் பெண் சுதந்திரத்தை அழுத்தமாக பேசியிருப்பார் பாலசந்தர். அந்த காலத்திலேயே வேலைக்கு போகும் பெண்களின் மனநிலை, கஷ்டம், தியாகம், குடும்ப சிக்கல்கள், தன்மானம், சுய ஆசைகளை பேசியிருப்பார். எம்.எஸ்.வி.யின் இசையில் 'தெய்வம் தந்த வீடு', 'கண்ணிலே என்ன உண்டு கைகளா அறியும்', 'அடி என்னடி உலகம்', 'கடவுள் அமைத்து வைத்த மேடை' என எல்லாப் பாடல்களும் இன்றைக்கும் மறக்கமுடியாதவை. வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடி. கவிதா என்ற கேரக்டரில் சுஜாதா நடித்த சிறந்த படங்களில் ஒன்று. ஸ்ரீப்ரியா, படாபட் ஜெயலட்சுமி கேரக்டரும் புதுமை, புரட்சி பேசுபவை. இன்றும் சுஜாதா மாதிரியான கேரக்டர்கள் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார்கள். தெலுங்கு, பெங்காலி, கன்னடத்திலும் இந்த படம் ரீமேக் ஆனது.

அவர்கள் (1977) - அனு




ஒரு சந்தேகப்புத்தி கொண்ட ஆணிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் ஒரு பெண்ணின் கதை எனலாம். கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண், மற்றொரு ஆணின் ஆதரவோடு வாழ முற்படும்போது ஏற்படும் மனப்போராட்டங்கள் மற்றும் மனிதநேயத்தைப் பேசியது. தங்கள் வாழ்க்கையில், தங்கள் குடும்ப பெண்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள் வாழ்க்கையில் இப்படிப்பட்ட பல சந்தேகப்புத்தி தாக்குதல் நடந்ததே என பல பெண்கள் பீல் பண்ணினார்கள். அனு என்ற அந்த பெண்ணாக சுஜாதா நடிப்பில் முத்திரை பதித்தார். சந்தேகப்புத்தி ஆணாக ரஜினி, நல்லகுணமுள்ள ஆணாக கமல்ஹாசன் வருவார். உனக்கு என்ன கிப்ட் வேணும்?' என்று நாயகன் கேட்க, 'டைவர்ஸ்' என்பாள் நாயகி. இப்படிப்பட்ட கருத்துகளை அந்த காலத்தில் சொல்லியிருந்தார் பாலசந்தர். பெண்கள் ரசித்தார்கள். பல பெண்கள் தங்கள் கடந்த காலத்தை, நிகழ்காலத்தை எண்ணி வருத்தமும் அடைந்தார்கள். கணவனால் கொடுமை அனுபவிக்கும் பெண்களுக்கு இந்த படம் சமர்பணம் எனலாம்.

தண்ணீர் தண்ணீர் (1981) - செவந்தி



தமிழில் வந்த சிறந்த சமூக பிரச்னையை பேசும் படங்களின் ஒன்று. ஒரு கிராமத்து மக்களின் குடிநீர் பிரச்னை மற்றும் அதனைச் சுற்றி நடக்கும் அரசியல் சமூக அவலங்களை அழுத்தமாகப் பேசியது. கோமல் சுவாமிநாதனின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. செவந்தி என்ற கேரக்டரில் போலீஸ்காரர் மனைவியாக சரிதா நடித்து இருப்பார். அந்தகால தண்ணீர் கஷ்டத்தை, பல கிலோமீட்டர் அலைந்து தண்ணீர் சுமக்கும் பெண்களின் வலியை சொன்னது. சரிதா தண்ணீர் சுமக்கும் காட்சிளை பார்த்த பல பெண்கள் கண்ணீர் விட்டனர். இந்த படத்துக்கு மத்திய, மாநில அரசு விருதுகள் கிடைத்தன. ஒரு விருது வழங்கும் விழாவில் 'என் மீது அரசுக்கு கோபம் இருக்கலாம். தண்ணீர் தண்ணீர் படத்தால் ஏற்பட்ட அந்தக் கோபத்தின் காரணமாக, இந்தப் படத்துக்கும் விருது தரப்படமாட்டாது என்று எண்ணினேன். அதற்கு மாறாக, எம்.ஜி.ஆர். கையால் இப்போது விருது வாங்கி இருக்கிறேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார் பாலசந்தர். அரசுக்கு எதிரான கருத்துள்ள படமாக இருந்தாலும் கருத்தாழம் மிக்க படமாக இருந்ததால் விருது கொடுத்தது எம்ஜிஆரின் அரசு.

சிந்து பைரவி (1985) - சிந்து




பாலசந்தர் இயக்கத்தில் சிவகுமார், சுகாசினி, சுலோக்சனா நடித்த இந்த படத்தை பார்க்காதவர்கள், பாராட்டாதவர்கள் குறைவு. ஒரு கர்நாடக சங்கீத பாடகரின் வாழ்க்கை, குடியால் அழியும் குடும்பம் என சொன்ன பாலசந்தர், பைரவியாக வரும் சுலோக்சனா கேரக்டர் மூலமாக பல உணர்வுகளை சொல்லியிருப்பார். சிந்துவாக வரும் சுகாசினி மூலமாக புரட்சி பேசியிருப்பார். கிளைமாக்சில் சுகாசினி செய்கிற காரியம், எடுக்கிற முடிவு பல பெண்களை கலங்க வைத்தது. சிலர் இது தவறான உறவு என விமர்சனம் செய்தாலும் படம் ஹிட்டானது. சுகாசினிக்கு தேசிய விருது கிடைத்தது. அவர் பாடிய நானொரு சிந்து பாடல் இன்றும் ஒலிக்கிறது. இந்த கதையை பிற்காலத்தல் சஹானா என்ற பெயரில் டிவி சீரியலாகவும் எடுத்தார் பாலசந்தர்.

இந்த படங்களையும் பார்த்து இருக்கீங்களா?

இந்த படங்கள் தவிர, அச்சமில்லை அச்சமில்லை (1984) படத்தில் கிராமத்து அரசியலையும், ஊழலையும் எதிர்த்துப் போராடும் ஒரு நேர்மையான பெண்ணின் கதையை சொல்லும் கரு. சுதந்திர போராட்ட தியாகி மகளாக, அரசியல் அநீதிக்கு எதிராக போராடி கிளைமாக்சில் வேறு ஒரு அவதாரம் எடுப்பவராக தேன்மொழி கேரக்டரில் வருவார் சரிதா. பலருக்கு அந்த கேரக்டர் எச்சரிக்கை மணி.

வறுமை யின் நிறம் சிவப்பு (1980) படத்தில் வேலையில்லாமல் போராடும் இளைஞனுக்கு உதவும் பெண்ணின் குணத்தை சொல்லியிருப்பார். ஸ்ரீதேவி அந்த கேரக்டரக்கு பொருந்தி இருப்பார். சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலை மறக்க முடியுமா.

அக்னி சாட்சி (1982)யில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் விசித்திரமான குணங்கள் மற்றும் திருமண வாழ்வில் அவளது நிலை பற்றிய மாறுபட்ட கோணத்தை அழுத்தமாக, தனக்கே உரிய பாணியில் சொல்லியிருப்பார் பாலசந்தர். சரிதா அந்த கேரக்டராக வாழ்ந்து, மாநில அரசு விருது பெற்றார்.



கல்யாண அகதிகள் (1985)படம் இன்னும் வித்தியாசமானது. திருமணத்திற்குப் பிறகு சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கலாச்சார மற்றும் வாழ்வியல் சவால்களை மையமாகக் கொண்டது. திருமணத்துக்குபின் போராடும் 7 பெண்களின் வலியை சொன்னது. ரதி, ஒய் விஜயா, வனிதா, சீமா மற்றும் சரிதா கேரக்டரை தங்களுக்குள் பொருத்தி பார்த்தனர் பல பெண்கள். வரதட்சனை கொடுமை தாக்கத்தை படம் காண்பித்தது.

கல்கி (1996) படத்தில் பாலசந்தர் சொன்னது எல்லாராலும் ஏற்க முடியாத விஷயங்கள் என்றாலும், பிரகாஷ்ராஜ் என்ற சுயநல கணவனால் பாதிக்கப்படும் பெண்ணாக கீதா ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜை ஆட்டுவித்து பல உண்மகைளை சொல்லாமல் சொல்லும் கேரக்டரில் ஸ்ருதியும் நடிப்பில் ஜொலித்து இருப்பார்கள். சைடிஸ்ட் ஆண்களிடம் சிக்கி தவிக்கும் பெண்கள், அப்படிப்பட்ட ஆண்களுக்கு பாடம் புகட்டும் பெண் என பல ஆழமான விஷயங்களை அதில் சொல்லியிருப்பார். அதில் வேலைக்காரியாக வரும் பாத்திமாபாபு கேரக்டரை கூட பல ரசித்தார்கள்.

இப்படியாக பல படங்களில் பெண்களின் உணர்வை, ஆசையை, கோபத்தை, வீரத்தை, பயத்தை, தியாகத்தை தனது படங்களில் சொல்லி, பெண்களுக்கு பிடித்த இயக்குனராகவும் இன்றும் திகழ்கிறார் கே.பாலசந்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !