‛என்ன விலை' படத்தில் வக்கீலாக நிமிஷா சஜயன்
பிரபல மலையாள கதாசிரியர் சஜீவ் பழூரின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்ன விலை' படத்தில் நிமிஷா சஜயன் வக்கீலாக நடிக்கிறார். அவர் தாய்மொழி மலையாளம் ஆக இருந்தாலும் அவரே டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ‛‛மலையாளத்தில் சஜீவுடன் பணியாற்றி உள்ளேன். இந்தக் கதாபாத்திரத்திற்காக தயாரான விதம் புதுமையானது, மறக்க முடியாதது. உண்மையான கோர்ட் விசாரணைகளை நேரில் பார்த்த அனுபவம் ஏற்பட்டது. இதற்கு முன்பும் ஒரு படத்தில் நான் வக்கீலாக நடித்திருக்கிறேன். ஆனால், 'என்ன விலை' திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. நடிப்பதற்கு முன்பு கோர்ட் சென்று அங்குள்ள வழக்கு விசாரணைகளை இயக்குனர் சஜீவ் பழூர் நேரில் கவனிக்கச் சொன்னார். அதற்கு முன்பு, வழக்கறிஞர்கள் வாதிடும் விதம் குறித்து எனக்குள் ஒரு கற்பனை இருந்தது. ஆனால், அதை நேரில் பார்த்தபோது அவர்கள் பேசும் விதம், வாதிடும் முறை, அங்குள்ள சூழல் அனைத்தும் நான் நினைத்ததைவிட மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. அந்த அனுபவமே, இந்த படத்துக்கு கை கொடுத்தது என்றார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிமிஷா சஜயனும், சஜீவ் பழூரும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நிமிஷா சஜயன் கதாநாயகியாக அறிமுகமான, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்' படத்திற்கு சஜீவ் பழூர் கதையாசிரியராக இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கருணாஸ் கதை நாயகனாக நடிக்கிறார். அவர் மனைவியாக விஜி வருகிறார்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது 'என்ன விலை' ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் பலர் கடலில் நாணயங்களை வீசும் பழக்கம் கொண்டவர்கள். கடலுக்குள் கிடக்கும் அந்த நாணயங்களை எடுக்க முயற்சிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களே கதையின் மையக்கரு.