இசை உலகில் இருந்து விடைபெற்ற 'அன்னக்கிளி' எஸ் ஜானகி : 'இசையரசி'யின் வாழ்க்கை பயணம்
'நைட்டிங்கேள் ஆப் சவுத் இண்டியா' என்று அழைக்கப்படும் இசையரசி எஸ் ஜானகி வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் காலமானார். தனது தேன் கலந்த குரலால் மக்களை மகிழ்வித்த ஜானகி இன்று நம்மோடு இல்லை. சினிமாவில் அவர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்ப்போம்...
இயல்பிலேயே பாடும் திறமை
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ் ஜானகிக்கு தனது சகோதரிக்கு இசை பயிற்று வித்த குருவான பைடிசாமி அவர்கள் தாமாகவே முன்வந்து எஸ் ஜானகிக்கு இசை பயிற்சி வழங்க ஆரம்பித்தார். சிறிது காலமே அவரிடம் பயிற்சி பெற்ற இவருக்கு இயல்பாகவே நன்றாக பாடும் திறமை இருந்ததால் அகில இந்திய வானொலி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசையும் வென்றார்.
விளையாடிய விதி
சினிமாவில் பாடும் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த இவருக்கு இசையமைப்பாளர் சலபதிராவின் அறிமுகம் கிடைக்க அவர் மூலமாக விதியின் விளையாட்டு என்ற படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து அதில் இரண்டு பாடல்களையும் பாடி முடித்தார். படத்தின் தலைப்பு போலவே ஏனோ இந்தப்படம் வெளிவரவில்லை.
ஏவிஎம்-ல் மாத சம்பளத்தில் பாடும் பணி
எஸ் ஜானகி பாடி தமிழில் வெளிவந்த முதல் திரைப்படம் மகதல நாட்டு மேரி இந்தப் படம் வெளியான ஆண்டு 1957. இப்படத்திற்கு இசை அமைத்தவர் ஆர் பார்த்தசாரதி இவருக்கும் இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னணி பாடகர் பிபி ஸ்ரீனிவாசும் எஸ்.ஜானகியும் முதன்முதலில் இணைந்து பாடியதும் இவருடைய இசையிலேயே. 1950களில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் பாடகர்களை மாதச் சம்பளத்திற்கு பணி அமர்த்திக் கொண்டிருந்த நேரம். பி சுசிலா போன்ற பாடகர்ளும் ஏவிஎம்மில் பணிபுரிந்திருக்கிறார்கள். அவ்வாறு எஸ் ஜானகியும் ஆரம்ப காலங்களில் ஏவிஎம்மில் இசைக்கலைஞராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவிஎம் நிறுவனத்தில் இருந்த காலங்களில் பல மொழிகளில் பல பாடல்கள் பாடும் வாய்ப்பும் இவருக்கு கிட்டியது. இந்த காலகட்டங்களில் இசை ஜாம்பவான்களான டிஆர் மகாலிங்கம், சீர்காழி எஸ் கோவிந்தராஜன் சிஎஸ் ஜெயராமன் ஆகியோருடன் சேர்ந்து பாடும் வாய்ப்பும் பெற்றார்.
பிரபலமாக்கிய பாடல்கள்
1959 ஆம் ஆண்டு வெளியான அபலை அஞ்சுகம் என்ற படத்தில் டி ஆர் மகாலிங்கத்துடனும் இதே ஆண்டில் வெளி வந்த எம்ஜிஆர் படமான தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படத்தில் சீர்காழி எஸ் கோவிந்தராஜனோடு இணைந்து ஆடிவரும் நாடக பொற்பாவையடி நீ என்ற பாடலையும், 1960ல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தெய்வப்பிறவி திரைப்படத்தில் அன்பாலே தேடியே என் அறிவு செல்வம் தங்கம் என்ற பாடலை சிஎஸ் ஜெயராமனோடும் இணைந்து பாடி தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார்.
இளையராஜா வருகைக்கு பின்...
தொடர்ந்து கொஞ்சும் சலங்கை, போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, தெய்வத்தின் தெய்வம், குங்குமம், ஆலயமணி பாதகாணிக்கை, வெண்ணிற ஆடை என்று எண்ணற்ற படங்களில் ஏராளமான காவிய பாடல்களை பாடியிருந்தாலும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வரவிற்கு பின் இவர் தன் இசைப் பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தையும் உச்சத்தையும் அடைந்தார் என்றால் அது மிகையல்ல.
1976 ஆம் ஆண்டு தேவராஜ் மோகன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் இளையராஜா என்ற இசையமைப்பாளர் அறிமுகமான அன்னக்கிளி திரைப்படம், இளையராஜாவிற்கு மட்டுமல்ல எஸ் ஜானகிக்கும் ஒரு பெரிய மாற்றத்தை தந்த படம் என்றே சொல்ல வேண்டும். இளையராஜாவின் படைப்பில் இவர் பாடிய அத்தனை பாடல்களும் இன்றும் என்றும் இசை உள்ளங்களை கொள்ளை கொள்பவையாகவே உள்ளன.
ஏஆர் ரஹ்மான் கூட்டணியிலும் ஹிட்
90களில் தமிழ் திரை இசையின் புதிய அலையாக வீசத் தொடங்கிய ஏஆர் ரஹ்மான் இசையிலும் பல பாடல்களை பாடி அவை அத்தனையும் இன்றைய இளைய தலைமுறையை ஆக்கிரமித்துள்ளன என்றால் அது மிகையல்ல. கத்தாழங் காட்டு வழி (கிழக்கு சீமையிலே), ஒட்டகத்த கட்டிக்கோ (ஜென்டில்மேன்), கோபாலா கோபாலா (காதலன்), நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே), மார்கழி திங்கள் அல்லவா (சங்கமம்), காதல் கடிதம் தீட்டினேன் (ஜோடி), முதல்வனே (முதல்வன்) போன்ற பாடல்கள் மூலம் இன்றைய தலைமுறைகளையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் என்றே கூற வேண்டும்.
தலைமுறைகளை கடந்த பாடகி
கேவி மகாதேவன், எம்எஸ் விஸ்வநாதன், வி குமார், சங்கர் கணேஷ், ஜிகே வெங்கடேஷ், இளையராஜா, ஏஆர் ரஹ்மான், அனிருத் என 6 தலைமுறையாய் பெரும்பாலான இசை ஜாம்பவான்களிடமும் பணிபுரிந்துள்ளார். டிஎம் சவுந்தர்ராஜன், பிபி ஸ்ரீனிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன், கேஜே யேசுதாஸ், எஸ்பி பாலசுப்ரமணியம், பி ஜெயசந்திரன், மலேசியா வாசுதேவன், மனோ, மட்டுமின்றி அடுத்த தலைமுறை பாடகர்களான உன்னி கிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ், ஹரிஹரன், சங்கர் மகாதேவன் என்றும், நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் போன்றோருடனும் டூயட் பாடி தனது குரலின் இனிமையையும், இளமையையும் தக்க வைத்துள்ள பெருமைக்குறியவர்.
17 மொழி, 48,000 பாடல்கள்
இதுவரை 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடல்களை பாடிய சாதனையாளர். தெலுங்கு மொழியில் பல பக்திப் பாடல்களை இவரே எழுதி இசையும் அமைத்து பாடியிருக்கின்றார்.
இசையமைப்பாளர்
'மவுனப் போராட்டம்' என்ற ஒரு தெலுங்கு படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயோடேட்டா
இயற்பெயர் : எஸ் ஜானகி
சினிமா பெயர் : எஸ் ஜானகி
பிறப்பு : 23-ஏப்ரல்-1938
இறப்பு : 11-ஜூலை-2026
பிறந்த இடம் : குண்டூர் , ஆந்திர மாநிலம்
சினிமா அனுபவம் : 1957-2017
கணவர் : ராம் பிரசாத் (இறப்பு)
வாரிசு : முரளிகிருஷ்ணா (இறப்பு)
பெற்றோர் : ராமமூர்த்தி - சத்யவதி
பட்டம் : நைட்டிங்கேள் ஆப் சவுத் இண்டியா
விருதுகள்
1. 1977ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது' '16 வயதினிலே' திரைப்படத்தில் 'செந்தூர பூவே' பாடல் பாடியதற்காக வழங்கப்பட்டது.
2. 1981ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது' 'ஒப்போல்' என்ற மலையாளப் படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
3. 1984ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது' 'சித்தாரா' என்ற தெலுங்கு படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
4.1992ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது' 'தேவர் மகன்' திரைப்படத்தில் 'இஞ்சி இடுப்பழகா' பாடல் பாடியதற்காக வழங்கப்பட்டது.
5. சிறந்த பின்னணி பாடகிக்கான 'தமிழ் நாடு அரசு விருது' 6 முறை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
6. சிறந்த பின்னணி பாடகிக்கான ஆந்திர அரசு விருதான 'நந்தி விருது' 10 முறை வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
7. சிறந்த பின்னணி பாடகிக்கான 'கேரள மாநில சினிமா விருது' 11 முறை வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
8. தமிழக அரசால் 'கலைமாமணி விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
9.1986ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'பிலிம் பேர் விருது' 'சாஹேப்' என்ற ஹிந்தி படததிற்காக வழங்கப்பட்டது.
10. மைசூர் பல்கலை கழகத்தால் 'கவுரவ டாக்டர் பட்டம்'
11. 2013ல் இந்திய அரசு 'பத்ம பூஷன்' விருது அறிவித்தது. ஆனால் இதனை நிராகரித்தார்.