உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜானகி மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல்

ஜானகி மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல்


புகழ்பெற்ற பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானார். அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை திரிஷா

திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த '96' படத்தில் பாடகி ஜானகியும் நடித்திருந்தார். அந்த காட்சிகள் நீளம் கருதி நீக்கப்பட்டன. இப்பொழுது திரிஷா, விஜய் சேதுபதி. எஸ் ஜானகி சம்பந்தப்பட்ட அந்த காட்சிகள் நெட்டில் வைரல் ஆகி வருகிறது. சினிமாவில் எஸ் ஜானகி கடைசியாக தோன்றியது இந்த படத்தில் தான். ஜானகியுடன் நடித்தது பாடியது குறித்து திரிஷாவும் இன்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நடிகை திரிஷா வெளியிட்ட இரங்கல் செய்தி: என்னுடைய மிகச் சிறப்பு வாய்ந்த திரைப்படங்கள் ஒன்றில் உங்கள் பெயரைத் தாங்கி நடிப்பது, என் வாழ்நாளின் மிகச்சிறந்த பெருமைகளில் ஒன்றாக என்றும் இருக்கும். ஆனால், உங்களை அறிந்திருப்பதும், உங்கள் அன்பைப் பெற்றிருப்பதும் நான் என்றென்றும் நெஞ்சாரப் போற்றும் ஒன்று. உங்கள் கட்டியணைப்புகளுக்கும், உங்கள் கனிவிற்கும், உங்கள் சிரிப்பிற்கும் மற்றும் 'மிகச்சிறந்த கலைஞர்கள் தான் மிகவும் எளிமையான மனிதர்கள்' என்பதை எனக்கு எப்போதும் நினைவூட்டியதற்கும் நன்றி. உங்கள் குரல் என்றும் வாழும். அமைதியாக ஓய்வெடுங்கள் ஜானகி அம்மா. உங்களை நான் மிகவும் இழந்து தவிக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் சவுந்தர்யன்

இசையமைப்பாளர்களின் மெட்டு பாதி என்றால் ஜானகி அம்மா அவர்களின் ஈர்ப்பான குரல் வளம் பாதி. அதனால் தான் இவர்கள் பாடிய பாடல்கள், நூற்றுக்கு நூறு எல்லோருடைய இதயத்தையும் வசியப்படுத்தியது. இந்த இசையரசியின் குழந்தைத்தனமான எளிமையையும், தன்னடக்கத்தையும், வேறு யாரிடத்தும், நாம் காண முடியாது.

இயக்குனர் ஆர்.பார்த்திபன்

பிரிவின் வலி ஒரு பிறவியின் வலி பெரியது, அவர்களை சார்ந்தோருக்கும், சம்மந்தப்பட்டவருக்கும். ஆனால் அதை ஒரு இயற்கை நியதியாக, இறைவனடியில் இளைப்பாறுகிறார் என சகஜமாக பார்க்கும் சகலருக்கும் அவ்வலி அவ்வளவாக இருக்காது, மீளாத் துயராகத் தொடராது. நேற்று முன்தினம் ஒளிப்பதிவாளர் செழியன், நேற்றிரவு அம்மா ஜானகி அவர்களின் மறைவு மனதில் துக்கத்தை வெவ்வேறு ரிக்டர் அளவுகளில் பதிவாக்கியது. ஆழ்ந்த அனுதாபத்தை அவர்களின் குடும்பத்தாருக்கு சொல்வதைத் தவிர வேறென்ன செய்வது என்பதறியாத நிலையோடு நின்றுவிட்டது.

நடிகர் விஷால்

நமது திரையுலகின் மற்றொரு மாபெரும் ஆளுமை இனி நம்மிடையே இல்லை. இசைத்துறைக்கு இது ஒரு பேரிழப்பு. ​சில குரல்கள் காலத்தைக் கடந்து வாழ்பவை, அவை ஒருபோதும் நம்மை விட்டு மறைவதில்லை. ஜானகி அம்மாவின் பாடல்கள் வெறும் மெல்லிசைகள் மட்டுமல்ல, அவை நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மோடு பயணித்த நினைவுகள். ​இன்று, நாம் அந்த குரலுக்கு விடை கொடுக்கிறோம், ஆனால் அவர் கோடிக்கணக்கான நமக்கு பரிசளித்த உணர்வுகளுக்கு என்றும் முடிவில்லை.
​ஆழ்ந்த இரங்கல்கள் ஜானகி அம்மா. உங்கள் இசை தலைமுறைகளைக் கடந்து என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, நான்கு முறை தேசிய விருதுகளையும் எண்ணற்ற மாநில அரசின் விருதுகளையும் வாங்கிக் குவித்த தென்றலிசைப் பாடகி, தேன்குரல் தேவகி எஸ்.ஜானகி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகின்றது.

சந்தனக் காற்றாம், சங்கதி ஊற்றாம், சங்கீதக் குயிலாம் என்னுடைய 'சம்சாரம் சங்கீதம்' படத்திலே என் மகன் சிலம்பரசனுக்காக 'ஐயம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்' என்று பாட்டு படித்தாயே, முத்திரை பதித்தாயே, இன்று நீங்காத நித்திரைக்குச் சென்று விட்டாயே என்று என்னுடைய நெஞ்சம் நீங்காத சோகத்தைக் கொண்டு விட்டது.

அம்மையாரை இழந்து வாடும் அவரது இல்லத்தாருக்கும் இந்திய கலை உலகத்தாருக்கும் ரசிகர்களுக்கும் நேயர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

இயக்குனர், பாடலாசிரியர் ஆர்.வி.உதயகுமார்

ஒரு நாளும் உனை மறவாத..
சின்னக்கிளி வண்ணக்கிளி
கூண்டுக்குள்ளே உன்ன வச்சு..
அந்த வானத்தப்போல மனம் படிச்ச..
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு… (பொன்னுமனி)
தினக்கு தினக்கு தம் ..அமுதூறும் தேன்பிறையே..(உறுதிமொழி)
அதிகாலை நிலவே..(உறுதிமொழி)
முகமென்ன மோகமென்ன?( சுபாஷ்)

போன்ற நான் எழுதிய பாடல்களை உணர்வையும் அழகியலயும் கலந்து உயிரோட்டத்துடன் தன் வசியக் குரலால் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜானகி அம்மா அவர்கள் மறையாத புகழோடு வாழ்வதாகவே நினைக்கிறேன்.. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !