உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காமராஜ் படத்தை நாட்டுடமை ஆக்குங்கள் : முதல்வருக்கு வேண்டுகோள்

காமராஜ் படத்தை நாட்டுடமை ஆக்குங்கள் : முதல்வருக்கு வேண்டுகோள்

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 124 பிறந்தநாளில் காமராஜ் படமெடுத்த இயக்குனர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் தான் கடனில் தவிப்பதாவும், காமராஜ் படத்தை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்றும், முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில்

காமராஜர் வாழ்வை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். பலரது பாராட்டையும் பெற்றது அத்திரைப்படம். அவரின் முதல் திரை ஆவணம் அதுதான். திரைப்படம் தயாரிக்க பல்வேறு தரப்பிடம் உதவியும், வங்கிக்கடனும் பெறப்பட்டது. 'காமராஜ்' திரைப்படத்துக்குப் பின் 'WELCOME BACK GANDHI', 'திருக்குறள்' போன்ற படங்களை தயாரித்தேன். அவைகளும் 'காமராஜ்' திரைப்படத்துக்கான கடனை திரும்பச் செலுத்த உதவவில்லை. அதனால் மிகுந்த மனச்சுமையுடன், கடன் வழங்கியவர்களை எதிர்கொள்ளும் துணிவின்றி, வாழ்வில் பயணிக்கிறேன்.

'காந்தி' திரைப்படத்துக்கு மத்திய அரசு உதவியது. 'அம்பேத்கர்' திரைப்படத்துக்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் சுமார் 18 கோடி ரூபாய் உதவின. தமிழக அரசு 'பெரியார்' படத்துக்கு உதவியது. காமராஜரை தாங்கள் ஒரு வழிகாட்டியாக கொண்டுள்ள நிலையில், தங்கள் அரசு எனக்கு உதவும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நாட்டின் நலனுக்காகவே தயாரிக்கப்பட்ட 'காமராஜ்' திரைப்படத்தைத் தாங்கள் நாட்டுடைமையாக்கி, அப்படத்தை உலகத் தமிழர்களுக்கு சமர்ப்பிக்கும்படி வேண்டுகிறேன்.

அதற்கு ஈவுத் தொகையாக தாங்கள் ரூ. 2 கோடி (RUPEES TWO CRORES) வழங்கும்படி வேண்டுகிறேன். நான் கடனைத் திருப்பிச் செலுத்தி, இத்திருப்பணியை மேற்கொண்டதற்கான மனத்திருப்தியை அடைய இயலும். தங்களின் இந்த உதவியினால் உலகத் தமிழர்கள் தங்களை வாழ்த்துவர். தங்கள் பணி பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துகள். காமராஜரின் அருளாசிகள் தங்களுக்கு கிட்டட்டும். வாழ்க வளத்துடன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காமராஜ் படம் தயாரிக்க, வெளியிட மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த, மாநிலத்தில் பவரில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள், தொழிலதிபர்கள் உதவாத நிலையில், காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைத்துள்ள முதல்வரிடம் இந்த கோரிக்கை வைத்துள்ளார் பாலகிருஷ்ணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !