ஜனநாயகன் : தியேட்டர்களுக்குப் பறந்த அதிரடி உத்தரவு
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' அவர் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வர வேண்டிய படம். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்பு வெளியாக உள்ளது. அடுத்த வாரம் ஜூலை 23ம் தேதி வியாழன் அன்று இப்படம் உலகம் முழுவதும் சுமார் 8000 தியேட்டர்களில் வெளியாவதாக சொல்லப்படுகிறது.
பெங்களூருவில் நேற்றைய காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு ஆரம்பமாகியது. அதிகபட்சமாக 1800 ரூபாய் வரை ஆன்லைன் தளங்களிலேயே டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விஜய் படம் வந்தாலே தமிழகத்திலும் டிக்கெட் கட்டணங்களை அதிகமாக உயர்த்திவிடுவார்கள். இதெல்லாம் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பாக நடந்தவை. டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் அதிக அளவில் விற்பது முறைகேடு, ஊழல் கணக்கில்தான் வரும்.
ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஊழல், லஞ்சம் ஆகியவற்றிற்கு எதிராக தனது ஆட்சி கடும் நடவடிக்கையை எடுக்கும் என விஜய் சொல்லி வருகிறார். அதனால், அவர் படம் வெளியாக உள்ள தியேட்டர்களுக்கு அதிரடி உத்தரவு பறந்துள்ளதாம்.
எக்காரணத்தைக் கொண்டும் டிக்கெட் கட்டணத்தை அதிகமாக்கி விற்கக் கூடாது. மேலும் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் படத்தை 18 வயதுக்குக் கீழுள்ள சிறுவர், சிறுமியர், குழந்தைகள் என யாரும பார்க்க முடியாது.
எதிர்க்கட்சிகள் அனைவரும் 'ஜனநாயகன்' படத்தின் திரையிடலில் ஏதாவது முறைகேடு நடந்தால் அவற்றை வீடியோ எடுத்து வெளியிடத் தயாராக உள்ளார்களாம். அதனால், தங்களது ஆட்சிக்கும் எந்தவிதமான கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என தயாரிப்பாளர் மூலம் வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.