உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிரெண்டிங் ஹீரோயின்களில் யார் நம்பர் 1

டிரெண்டிங் ஹீரோயின்களில் யார் நம்பர் 1

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் புதிய ஹீரோயின்கள் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்கள். அவர்களது ஒவ்வொரு அசைவுகளையும் ரசிக்கும் விதத்தில் ரீல்ஸ்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

அழகு என்பதை மீறி அவர்களது நடை, உடை, பேச்சு ஆகியவற்றை அதிகமாக ரசிக்கும் ரசிகர்களே அதிகம். ஒரு நடிகையின் ஹேர் ஸ்டைல், பொருத்தமான ஆடை அணியும் விதம், அவர்களது இனிமையான பேச்சு என தனித்தனியாக ரீல்ஸ்களைத் தேடித் தேடி பிடித்து பகிர்ந்து வருகிறார்கள்.

ரீல்ஸ்களால் ஆட்சியே மாறியது என்று சொல்லப்படும் நிலையில் இன்று யாருடைய ரீல்ஸ்கள் அதிகமாகப் பகிரப்படுகிறதோ அவர்தான் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக நம்பர் 1 இடத்தைப் பிடிப்பார் என்கிறார்கள்.

இன்றைய சூழலில் சில ஹீரோயின்கள்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த விதத்தில் நம்பர் 1 இடத்திற்கு போட்டியிடும் இளம் ஹீரோயின்கள் யார் யார் எனப் பார்ப்போமா….

மமிதா பைஜூ

தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே 'ரிபெல்' மலையாளப் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் யார் இவர் என மமிதாவைப் பற்றி கூகுள் செய்ய ஆரம்பித்தனர். 2024ல் ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ரிபெல்' படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும் அந்தப் படத்தில் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.

கடந்த வருடம் வெளிவந்த 'டியூட்' படம் அவரைப் பற்றிப் பேச வைத்தது. அதிலும், பழைய 'கருத்த மச்சான்' பாடலுக்கு அவர் ஆடிய நடனம் வைரலாகி அந்தப் பாடலை வைத்து மில்லியன் கணக்கில் ரீல்ஸ் பதிவிட்டவர்கள் அதிகம். அதன்பின் இளம் ரசிகர்களின் கனவு நாயகியரில் ஒருவராக அவர்களது மனதில் இடம் பிடித்துவிட்டார்.



தனுஷ் ஜோடியாக 'கர' படத்தில் நடித்தாலும் அம்மாதிரியான கதாபாத்திரங்களை ரசிகர்கள் விரும்பவில்லை என்பது அப்படத்தின் தோல்வியிலேயே தெரிந்துவிட்டது. வரும் வாரம் விஜய் நடித்து வெளிவர உள்ள 'ஜனநாயகன்' படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அடுத்து 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இரண்டு வானம்' என இரண்டு படங்கள் இந்த வருடத்தில் வெளியாக உள்ளது.

கயாடு லோஹர்

2025ல் வெளியான 'டிராகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கயாடு லோஹர். அதற்கு முன்பே கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துவிட்டார்.

'டிராகன்' படத்தின் அபாரமான வெற்றி கயாடு யார் என்பதை ரசிகர்களைத் தேட வைத்தது. இத்தனைக்கும் அந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாகத்தான் அவர் நடித்திருந்தார்.



அதற்கடுத்து கடந்த வாரம் வெளியான 'இதயம் முரளி' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராகத்தான் நடித்தார். ஆனாலும், அதர்வாவை மீண்டும் பார்த்துப் பேசும் அந்த ஒரே ஒரு காட்சியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

அதற்கு முன்பாக சாய் அபயங்கரின் 'பவழ மல்லி' பாடல் அவரை ரீல்ஸ்கள் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது.

அடுத்து 'இம்மார்டல், மஞ்சனத்தி, சூர்யா 48' ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வர உள்ளன. இவை தவிர மலையாளம், தெலுங்குப் படங்களும் வர உள்ளன.

ப்ரீத்தி முகுந்தன்

மலையாளத்திலிருந்து மமிதா பைஜு, அஸ்ஸாமில் இருந்து கயாடு லோஹர் என மற்ற மாநில ஹீரோயின்களுக்கு 'பயர்' விடும் ரசிகர்களாக இருந்தாலும் நம்ம ஊர் பெண் என்றால் ஒரு தனி பாசம் வந்துவிடும். அப்படி ஒரு பாசத்தை வளர்த்துள்ளவர் திருச்சியைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன். அங்குள்ள பிரபலமான என்ஐடி-யில் பி.டெக் முடித்தவர்.

2024ல் வெளியான 'ஸ்டார்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்தப் படம் சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. இருந்தாலும் அவர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'கண்ணப்பா', மலையாளப் படமான 'சர்வம் மாயா' ஆகியப் படங்கள் மூலம் அதிகம் பிரபலமானார்.



இந்த வருடத்தில் அவர் நடித்து வெளிவந்த தமிழ்ப் படமான 'பிளாஸ்ட்' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்து ப்ரீத்தி ரசிகர்களின் பிரியத்திற்குரிய ஹீரோயின் ஆகியுள்ளார். கடந்த வாரம் வெளிவந்த 'இதயம் முரளி' படமும் அவருக்கான ரசிகர்களை அதிகரிக்க வைத்துள்ளது.

அடுத்து தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், தமிழில் 'தாஷமக்கான்' என வர உள்ளன.

ஸ்ரீலீலா

தமிழில் இந்த வருட வெளிவந்த 'பராசக்தி' படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீலீலா. அதற்கு முன்பே கன்னடம், தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.

'பராசக்தி' படத்தில் ஒரு துறுதுறுப்பான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். கன்னடம், தெலுங்கில் அவரது அசத்தலான நடனத்திற்காகவும் அதிக ரசிகர்களைப் பெற்றவர்.



தற்போது தமிழில் தனுஷ் நடித்து வரும் 'ஓம்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இது மட்டுமல்லாது இன்னும் சில படங்களிலும் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதில் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் இருக்கிறது என்கிறார்கள்.

'ஓம்' படம் வந்த பிறகு ஸ்ரீலீலா தமிழில் இன்னும் அதிகமாகப் பேசப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ருக்மணி வசந்த்

2025ல் வெளியான விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படத்திலும் கதாநாயகியாக நடித்தவர் ருக்மணி வசந்த்.

தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே கன்னடத்தில் சில படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்தவர். தமிழில் அறிமுகமான இரண்டு படங்களுமே அவருக்கு வெற்றிப் படமாக அமையவில்லை. இருந்தாலும் 'காந்தாரா சாப்டர் 1' படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.



அடுத்த மாதம் வெளியாக உள்ள 'டாக்சிக்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'டிராகன்' படத்தில் நடித்து வருகிறார். இவை இரண்டுமே பான் இந்தியா படங்கள்.

தமிழில் சில புதிய படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பிரியங்கா மோகன்

துறுதுறு, சுட்டித்தனம் என சில ஹீரோயின்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தாலும் சிலர் அவர்களது அமைதியான தோற்றத்தால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் பிரியங்கா மோகன்.

தமிழில் 'டாக்டர்' படம் மூலம் அறிமுகமானவர். அதற்கு முன்பு கன்னடம், தெலுங்கில் நடித்தவர். அடுத்து 'எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக், கேப்டன் மில்லர், பிரதர், மேட் இன் கொரியா' ஆகிய படங்களில் நடித்துவிட்டார்.



மேலே சொன்ன நடிகைகளை விட கூடுதலாக சில படங்களில் நடித்தவர். கடந்த வருடத்தில் 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் மூலம் வியூஸ்களை அள்ளியவர். தற்போது 'மஞ்சனத்தி' மற்றும் கவின் நடிக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

அவரை நோக்கிய சமூக வலைத்தள தாக்குதல்களிலிருந்து தப்பித்து தனி இடத்தைப் பிடிக்கப் போராடி வருபவர்.

மேலே குறிப்பிட்டுள்ள கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் நயன்தாரா, த்ரிஷா, 10 வருடங்களுக்கம் மேலாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, சமந்தா ஆகியோருடன் போட்டியில் உள்ளார்கள். அவர்கள் சில பல படங்களுக்குப் பிறகு ஏற்படுத்திய பரபரப்பை இவர்கள் ஓரிரு படங்களில் நடித்தன் மூலமே ஏற்படுத்திவிட்டார்கள். அதற்கு சோஷியல் மீடியாவும் ஒரு காரணம்.

அடுத்தடுத்து இவர்கள் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்கள், வெற்றி ஆகியவற்றை வைத்து இவர்களில் யார் அடுத்த நம்பர் 1 என்பது தீர்மானிக்கப்படும். உங்களுக்கு இவர்களில் யாரை மிகவும் பிடிக்கும் என்பதை கமெண்ட்டுகளில் தெரிவியுங்கள். அவற்றை வைத்தே அதற்குத் தகுதியானவர் இவர்தான் என்பதை சற்றே யூகித்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Natarajan Ramanathan, தேவகோட்டை
2026-07-20 20:08:50

கயாடு வேஸ்ட்....