மாஸ் ஹீரோக்கள் நடிக்காமல் தவற விட்ட சூப்பர் ஹிட் படங்கள்
தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவை மனதில் வைத்து ஒரு கதையை உருவாக்கி விட்டு, பிறகு ஏதோ சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போய், பிறகு அதே கேரக்டரில் வேறு ஒரு ஹீரோ நடித்திருப்பார். அந்த படம் சூப்பர் ஹிட்டும் ஆகி இருக்கும். பட ரிலீசிற்கு பிறகு, இது நான் நடிக்க வேண்டிய படம் என பல நடிகர், நடிகைகள் பேட்டி அளிப்பதை கேட்டிருக்கிறோம். அப்படி டாப் ஹீரோக்கள் நடிக்க மறுத்து அல்லது வேறு காரணங்களால் நடிக்க முடியாமல் போன படங்கள், வேறு ஒரு ஹீரோ நடித்து, மிகப் பெரிய ஹிட் ஆகி, வசூல் வேட்டை செய்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய தகலை தெரிந்து கொள்ளலாம்.
ஹீரோக்கள் நடிக்க மறுத்த ஹிட் படங்கள்:
முதல்வன் :
டைரக்டர் ஷங்கர் இந்த படத்தின் கதையை முதலில் ரஜினியிடம் தான் கூறி உள்ளார். அரசியல் காரணங்களால் ரஜினி இந்த கதையில் நடிக்க மறுத்ததால், பிறகு விஜய்யிடம் சென்று கூறி உள்ளார். ஆனால் சம்பளம், கால்ஷீட் போன்ற பிரச்னைகளால் விஜய்யும் மறுத்ததால் இந்த படத்தில் அர்ஜூன் நடித்தார். அர்ஜூனின் சினிமா வாழ்க்கையையே இந்த படம் மாற்றி அமைத்தது.
கஜினி :
இந்த கதையை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை மனதில் வைத்து தான் தயாரித்துள்ளார். படத்திற்கு மிரட்டல் என்று கூட டைட்டில் வைத்திருந்தார். போட்டோஷூட் எல்லாம் நிறைவடைந்த பிறகு, சில காரணங்களால் விஜய் நடிக்க முடியாமல் போனது. பிறகு தான் இந்த படம் சூர்யா கைக்கு சென்றது. அவருக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் இதுவாகும்.
கைதி :
டைரக்டர் லோகேஷ் கனகராஜ், விஜய்யை மனதில் வைத்து தான் இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார். ஆனால் பாடல், ஹீரோயின் எதுவும் இல்லாத படத்தில் எப்படி நடிப்பது என தயங்கி, விஜய் இந்த கதையை ரிஜெக்ட் செய்ய, கடைசியாக இந்த படம் கார்த்தி கைக்கு சென்றது. இந்த படம் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்ததுடன் லோகேஷ் கனகராஜ், கார்த்தி இருவரையும் புகழின் உச்சத்திற்கு கொண்டு போய் வைத்தது.
சிங்கம் :
டைரக்டர் ஹரி, சிங்கம் முதல் பாகத்தின் கதையை நடிகர் விஜய்யை மனதில் வைத்து தான் உருவாக்கி உள்ளார். ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போக, பிறகு துரைசிங்கம் கேரக்டரில் சூர்யா நடித்தார். முதல் பாகம் பிளாக்பஸ்டர் வெற்றி ஆனதால் அடுத்தடுத்த பாகங்களை இயற்றி, அவற்றையும் வெற்றி படமாக்கினார் ஹரி. இந்தியிலும் இந்த படத்தின் அனைத்து பாகங்களும் செம ஹிட் ஆனது.
நந்தா, காக்க காக்க :
சூர்யாவுக்கு ஸ்டார் அந்தஸ்தை பெற்று தந்த இந்த இரண்டு படங்களுமே அவரது கேரியரில் மிக முக்கியமான படங்கள். இந்த இரண்டு படங்களின் கதைகளுமே நடிகர் அஜித்திற்காக எழுதப்பட்டவை. ஆனால் அவர் நடிக்க மறுத்ததால், அதில் சூர்யா நடித்தார்.
தில், சாமி :
தில் படத்தின் கதையை பரணியும், சாமி படத்தின் கதையை ஹரியும் அஜித்திற்காக உருவாக்கினார்கள். ஆனால் அவர் இந்த கதைகளில் நடிக்க மறுத்ததால் இரண்டிலும் விக்ரம் நடித்து, மாஸ் ஆக்ஷன் ஹீரோ ஆனார்.
ஜீன்ஸ் :
டைரக்டர் ஷங்கர், முதலில் இந்த படத்தில் அஜித்தை தான் நடிக்க வைக்க, அவரிடம் சென்று கதை சொன்னார். அஜித்தும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டார். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் பிரசாந்த்தை இந்த கதையில் நடிக்க வைத்துள்ளார்.
அன்பே சிவம் :
டைரக்டர் சுந்தர்.சி முதலில் இந்த கதையில் ரஜினியை தான் நடிக்க வைக்க நினைத்துள்ளார். ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் பிறகு அந்த கதையில் கமல், மாதவன் ஆகியோர் நடித்தனர். இந்த படம் கிளாசிக் ஹிட் ஆனது.
பூவே உனக்காக :
டைரக்டர் விக்ரமன் இந்த கதையை நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கை தான் நடிக்க வைக்க கதை சொல்லி உள்ளார். ஆனால் அப்போது அவர் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் கிடைக்காமல் போனது. அதற்கு பிறகு தான் விஜய்யை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதுவரை பிளே பாய் கேரக்டர்களிலே நடித்து வந்த விஜய்க்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படமாக இது மாறியது. விஜய்யின் சினிமா பயணத்தையே இந்த படம் மாற்றி அமைத்தது என்றே சொல்லலாம்.
ஆடுகளம் :
டைரக்டர் வெற்றிமாறன் முதலில் இந்த கதையை சிம்புவிடம் தான் சென்று கூறி உள்ளார். அவர் நடிக்க முடியாமல் போனதால், பிறகு தனுசிடம் கதை சொல்லி, அவரை நடிக்க வைத்துள்ளார். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தனுஷ் பெற்றார்.