பிளாஷ்பேக் : பானுமதிக்கு கண்ணீரை தந்த 'கானல்நீர்'
வங்காள எழுத்தாளர் சரத் சந்திர சட்டர்ஜியின் பல நாவல்கள் தமிழில் சினிமாவாகி உள்ளது. அந்த வரிசையில் அவர் எழுதிய 'பரோதிதி' என்ற நாவல் 'கானல் நீர்' என்ற பெயரில் தயாரானது. பானுமதி நடித்த முக்கிய படங்களில் இதுவும் ஒன்று. பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா தயாரித்து, இயக்கினார்.
தெலுங்கு, தமிழில் உருவான இதில், ஏ.நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்தார். பானுமதி, சவுகார் ஜானகி, 'கல்கத்தா' விஸ்வநாதன், 'ஜாவர்' சீதாராமன், எம்.ஆர்.சந்தானம், பி.எஸ்.ஞானம், சூரியகாந்தம் மோகனா, ஜெயராமன், 'அப்பா' கே.துரைசாமி, 'பேபி' காஞ்சனா, பி.ஆர்.பந்துலு ஆகியோர் நடித்தனர்.
ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவுக்குப் லண்டன் சென்று உயர்படிப்பு படிக்க ஆசை. ஆனால் அதற்கு குடும்பம் தடைபோடுகிறது. அதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி, தனது அடையாளத்தை மறைத்து சென்னை வருகிறார். சென்னையில் ஒரு செல்வந்தரின் விதவை மகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் வேலை கிடைக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அனுமதியில்லை என்றாலும் கல்வி, காதலாக மாறுகிறது.
இதை அறிந்ததும் செல்வந்தர் நாகேஸ்வரராவை துரத்துகிறார். அதன்பிறகு ஒரு விபத்தில் சிக்கும் அவரை ஜமீன் குடும்பம் மீட்டுச் செல்கிறது. அவருக்கு சவுகார் ஜானகியை வலுகட்டாயமாக திருணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அவரோ சென்னை காதலி பானுமதியை மறக்க முடியாமல் தவிக்கிறார். தன் காதலர் குற்றமற்றவர், ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை அறியும் பானுமதி அவரை காண புறப்பட்டு வருகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
மாஸ்டர் வேணு இசை அமைத்தார். தெலுங்கு, தமிழில் ஒரே நாளில் வெளியானது. பத்திரிகைகள் படத்தை பாராட்டினாலும் வணிகரீதியாக படம் தோல்வி அடைந்தது. இதனால் பானுமதி பொருளாதாரா இழப்பை சந்தித்தார். 'எனக்கு கண்ணீரை தந்த கானல்நீர்' என்று பின்னாளில் பானுமதி படம் குறித்து பேசினார்.