உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கல்யாணபரிசு' முதல் 'உரிமைக்குரல்' வரை: ஸ்ரீதரின் டாப் 10 படங்கள்

'கல்யாணபரிசு' முதல் 'உரிமைக்குரல்' வரை: ஸ்ரீதரின் டாப் 10 படங்கள்

தமிழ் சினிமாவில் புதுமை செய்த, புரட்சி செய்த இயக்குனர்களின் ஒருவர் ஸ்ரீதர். அவரின் படங்கள் வித்தியாசமானவை, அவர் கதை சொல்லும் பாணி, நடிகர்களின் தேர்வு, அவர்களின் நடிப்பு, சொல்ல வரும் விஷயம், வசனங்கள், கிளைமாக்ஸ், அவர் பட பாடல்கள் அந்த காலத்தில் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக ரசிக்கப்பட்டன. குறிப்பாக, தமிழ்சினிமாவில் இளமையான காட்சிகளை, எளிமையான வசனங்களை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர்.

அந்த காலத்திலேயே ஹீரோயின்களை ஜீன்ஸ் போட்டு தனது படங்களில் உலாவ விட்டார். நைட்டியுடன் பாடலை பாட வைத்தார். கேமரா கோணங்களில்புதுமை படைத்து, கலர் படங்களில் அழகை புகுத்தினார், இயல்பான காமெடிகளை தனது படத்தில் வைத்தார் என்பார்கள். ஸ்ரீதரின் பாதையில்தான் பிற்காலத்தில் பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் தமிழ்சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சினார்கள் என்றும் சொல்லப்படுவது உண்டு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள சித்தாமூர் கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீதர். சின்ன வயதில் இருந்தே நாடகங்கள் எழுத தொடங்கினார். சினிமா ஆசையில், தனது 17 வயதில் தான் எழுதிய கதையை எடுத்துக் கொண்டு சினிமா வாய்ப்புத் தேடி ஒரு பெரிய சினிமா நிறுவனத்தில் வாய்ப்பு கேட்டார் ஸ்ரீதர். ஆனால், அவரை அந்த நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. பிற்காலத்தில் அதேகதையை சினிமாவாக்கினார். அந்த படம் வெற்றி பெற, அந்த கதையை இந்தியில் அதிக விலை கொடுத்து வாங்கினார்கள். அந்த நிறுவனம் ஏவிஎம். அந்த படம் ரத்தபாசம்.

1957ம் ஆண்டு இயக்குனர் ஆன ஸ்ரீதர். கல்யாண பரிசு 'போலீஸ்காரன் மகள்', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'நெஞ்சிருக்‍கும் வரை', 'சுமைதாங்கி', 'ஊட்டிவரை உறவு', காதலிக்‍க நேரமில்லை' 'வெண்ணிற ஆடை' 'சிவந்தமண்' 'மீண்டசொர்க்‍கம்', 'கலைக்‍கோயில்', 'கொடிமலர்', 'அழகே உன்னை ஆராதிக்‍கிறேன்' 'உரிமைக் குரல், மீனவ நண்பன், மீண்ட சொர்க்கம், போலீஸ்காரன் மகள், அவளுக்கென்று ஒரு மனம், வைர நெஞ்சம், இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன்.

நினைவெல்லாம் நித்யா, துடிக்கும் கரங்கள், ஒரு ஓடை நதியாகிறது, ஆலய தீபம், தென்றலே என்னை தந்துவிட்டேன் என்னை உள்ளிட்ட 30க்கும் அதிகமான படங்களை இயக்கினார். சிவாஜி முதல் ரஜினி, கமல், விக்ரம் வரை பல நடிகர்களை இயக்கினார். ஏகப்பட்ட நடிகர்களை அறிமுகம் செய்து வைத்தார். 2008ம் ஆண்டு தனது 75வது வயதில் காலமானார். இன்று அவரின் 93வது பிறந்தநாள். அவர் இயக்கிய படங்களில் மக்களால் கொண்டாடப்பட்ட டாப் படங்கள் இதோ:

1) கல்யாண பரிசு


ஸ்ரீதர் இயக்கிய முதல் படம். 1959ல் வந்தது. ஜெமினிகணேசனை விஜயகுமாரியும், சரோஜாதேவியும் காதலிப்பார்கள். இவர்கள் சகோதரிகள். என்ன நடக்கிறது என்பதை தனிப்பாணியில் ஸ்ரீதர் சொல்லியிருப்பார். தமிழ் சினிமாவின் காதல் படங்களில் கல்யாணபரிசுக்கு தனி இடமுண்டு. பிரபல பாடகர் ஏ.எம்.ராஜா இந்த படத்தில் இசையமைப்பாளர் ஆனார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதினார். 'வாடிக்கை மறந்தது ஏனோ', 'உன்னைக்கண்டு நான் வாட', 'காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்', 'துள்ளாத மனமும் துள்ளும்' சூப்பர் ஹிட்டானது. இன்றும் நாம் பேசும் மன்னார் அண்ட் காமெடியை இந்த படத்தில்தான் பேசுவார் தங்கவேலு. இந்த படத்தின் 100வது நாள் விழாவில் மதுரையில் தன்னுடன் நடித்த எம்.சரோஜாவை காதல் திருமணமும் செய்துகொண்டார். தெலுங்கில் நாகேஸ்வரராவ், இந்தியில் ராஜ்கபூர் நடிக்க, இந்த படம் ரீமேக் ஆனது. ஸ்ரீதரே இயக்கினார்.

2) தேன்நிலவு


1961ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கிய காதல் படம். ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா, நம்பியார், தங்கவேலு நடித்தனர். அந்த காலத்தில் பெரும்பாலான காட்சிகள் ஸ்டூடியோவில் படமாக்கப்படும். வெளியூர் படப்பிடிப்பு என்றால் ஊட்டி, கொடைக்கானல், மைசூர் செல்வார்கள். காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் தேன்நிலவுதான். 'ஓஹோ எந்தன் பேபி', 'பாட்டுப் பாடவா', 'நிலவும் மலரும்', 'மலரே மலரே தெரியாதா?', 'சின்ன சின்ன கண்ணிலே', 'காலையும் நீயே', 'ஊரெங்கும் தேடினேன்' என படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றும் ஒலிக்கிறது. இசையமைத்தவர் ஏ.எம்.ராஜா. தனது 2வது மனைவியுடன் காஷ்மீருக்கு தேன்நிலவு செல்வார் தங்கவேலு. அவர் மகளை, மானேஜராக வரும் ஜெமினி காதலிப்பார். ஆனால், அவர் மானேஜர் அல்ல, நம்பியார் என கதை செல்லும்.

3) சுமை தாங்கி


ஜெமினிகணேசன், தேவிகா, முத்துராமன் நடிப்பில் 1962ல் வெளி வந்த படம். தனது குடும்பத்துக்காக ஹீரோ எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான். விரும்பிய வாழ்க்கை வாழ முடியாமல், ஆசைகளை, காதலை துறந்து எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவில் வந்த அழுத்தமான படம். பிற்பாதியில் சோகம் அதிகம் என்றாலும், அதை ரசித்தார்கள். ''மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...'', ''மயக்கமா கலக்கமா...'' பாடல்களை கொடுத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்டு இந்த கதை தயாரானது. கிளைமாக்சில் ஜெமினிகணேசன் எடுக்கும் முடிவு, அந்த ஜெப காட்சிகள் மனதை பிசையும்.

4) நெஞ்சில் ஓர் ஆலயம்


தமிழ் சினிமாவில் சிறப்பான 100 படங்களில் இந்த படமும் கண்டிப்பாக இடம் பெறும். தனது காதலி தேவிகாவை சந்திக்கிறார் டாக்டரான கல்யாண்குமார். அவரோ முத்துராமனை திருமணம் செய்துகொண்டு, அவரை காப்பாற்ற காதலனிடம் வருகிறார். கடைசியில் காதலியின் கணவரை காப்பாற்றிவிட்டு, டாக்டரான கல்யாணகுமார் காலமாகிவிடுவார். இதுதான் கதை. இதை அவ்வளவு நாகரீகமாக, அழுத்தமாக எடுத்து இருப்பார் ஸ்ரீதர். படம் பார்த்துவிட்டு அழாதவர்கள் இருக்க முடியாது. இப்படிப்பட்ட காதலை அந்த காலத்தில் எந்த படமும் சொன்னது இல்லை. எங்கிருந்தாலும் வாழ்க', 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்', 'சொன்னது நீதானா', 'என்ன நினைத்து என்னை அழைத்தாயோ', 'முத்தான முத்தல்லவோ' என அத்தனை பாடல் சூப்பர் ஹிட் .வின்சென்ட் கேமரா ஆங்கிள் இன்றும் பாடமாக இருக்கிறது. 1962ல் வெளியான இந்த படம் தமிழ்சினிமாவில் சிறந்த செவ்வியல் படைப்பு என கொண்டாடப்படுகிறது.

5) வெண்ணிற ஆடை


தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா நடிகையாக அறிமுகமான படம். முதல் படத்திலேயே விதவையாக நடித்து இருப்பார். 700 படங்களில் நடித்த வெண்ணிற ஆடை மூர்த்தியும் இந்த படத்தில்தான் அறிமுகம். ஸ்ரீகாந்த் ஹீரோ. 1965ல் படம் வெளியானது. ஒரு டாக்டர், அவரின் காதல், ஒரு விதவை என மாறுபட்ட கோணத்தில் படம் நகரும். 'கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல, ஒருவன் காதலன், நீராடும், அம்மம்மா காற்று வந்து, என்ன என்ன வார்த்தைகளோ' பாடல்கள் ஹிட்டானது. இதே படத்தில் அறிமுகமான நிர்மலா பிற்காலத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா ஆனார். விதவை காதலை கதை பேசியது.

6) சிவந்தமண்


ஸ்ரீதர், சிவாஜிகணேசன், காஞ்சனா கூட்டணியில் வந்த கலர்புல் படைப்பு. பாரிஸ் நகரின் ஈபிள் டவர், இத்தாலியின் ரோம், ஸ்பெயின் நாட்டில் காளையை அடக்கும் விளையாட்டு, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலை என்று ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் படம். பழங்குடி மக்களின் நலனுக்காக போராடும் வீரனின் கதை. பெரும்பகுதியை வெளிநாடு, மீதியை சென்னை வடபழனி வாஹணி ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள். போர்த்துகீசிய சீன்கள், மதுபான பார், ரயில் சண்டை என படம் முழுக்க பிரமாண்டம். ஒரு சமூக படத்தை இப்படியும் பிரமாண்டமாக எடுக்கலாம் என ஷங்கருக்கே அடித்தளம் போட்டவர் ஸ்ரீதர். குறிப்பாக, 'பட்டத்து ராணி, ஒரு ராஜா ராணியிடம்' பாடல்கள் அபாரம். 1969ல் வெளியானது.

7) காதலிக்க நேரமில்லை


இந்த படத்தை பார்த்து ரசிக்காதவர்கள், சிரிக்காதவர்கள் இருக்க முடியுமா? ஸ்ரீதரின் மாஸ்டர் பீஸ். தமிழ் சினிமாவின் சிறந்த படங்களின் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படும் கதை. முத்துராமன், ரவிசந்திரன், காஞ்சனா, ராஜஸ்ரீ, டி.எஸ்.பாலையா, நாகேஷ் நடித்தவர். காதல், நட்பு, ஆட்மாறாட்டம், சினிமா த யாரிப்பு என படம் முழுக்க காமெடி, சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப்பட்ட முதல் நகைச்சுவை படம் இது. இன்றைக்கும் நாகேஷ் கதை சொல்லும் காமெடிக்கு வரவேற்பு அதிகம். அந்த வசனங்களை எழுதியவர் சித்ரலயா கோபு.எம்.எஸ்.வி.ராமமூர்த்தி கூட்டணியில் பாடல்களும் செம. இந்த படத்தில் சில சர்ச்சை காட்சிகள் இருப்பதாக அந்த காலத்தில் ஒரு எம்எல்ஏ சட்டசபையில் பேச, அது பரபரப்பாக, அதுவே படத்துக்கு பிளஸ் ஆகி, இன்னும் அதிக வசூலை பெற்றதாம். இந்த படத்தில் நைட்டியுடன் ராஜஸ்ரீ பாடிய பாடல் அந்த காலத்தில் பிரபலம். தெலுங்கு, இந்தியிலும் படம் ரீமேக் ஆனது.

8) உரிமைக்குரல்


படத்தயாரிப்பு நஷ்டம், சிவாஜியின் படத்தை தொடர முடியாத நிலையில் இருந்த ஸ்ரீதருக்கு எம்ஜிஆர் கால்ஷீட் கொடுக்க 1974ல் உருவான படம். அண்ணன், தம்பி குடும்ப பிரச்னை, காதல், நிலம், குடும்ப உறவுகளை பேசியது. எம்ஜிஆர் படம் என்பதால், அதற்கேற்ப கமர்ஷியலாக இயக்கினார் ஸ்ரீதர். படமும் ஹிட். அந்த பணத்தை வைத்து நின்று போய் இருந்த சிவாஜியின் வைர நெஞ்சத்தை தொடர்ந்தார் ஸ்ரீதர். உரிமைக்குரல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது எம்ஜிஆர், லதாவின் 'கல்யாண வளையோசை', 'நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு', 'விழியே கதை எழுது' போன்ற பாடல்கள், அப்புறம் ஸ்ரீதர் டச்.

9) ஊட்டிவரை உறவு


சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா நடித்த ஆள்மாறாட்ட கதை. அதை அழகாக, காமெடி கலந்துசொல்லியிருப்பார் ஸ்ரீதர். அப்பாவாக டி.எஸ்.பாலையாவும் கலக்கியிருப்பார். முத்துராமனுக்கு முக்கியமான வேடம். காதலிக்க நேரமில்லை மாதிரி படம் பண்ண ஆசைப்பட்ட சிவாஜி, இந்த கதையில் நடித்ததாக தகவல். 1967ல் தீபாவளிக்கு வந்த படம் ஹிட். தெலுங்கிலும் ரீமேக் ஆனது.

10) இளமை ஊஞ்சலாடுகிறது


கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ராவை வைத்து ஸ்ரீதர் இயக்கிய காதல் கலந்த ஒருவித மாறபட்ட படம். அதுவரை சொல்ல தயங்கிய பல விஷயங்களை தைரியமாக சொல்லியிருப்பார் ஸ்ரீதர். படம் பெரிய ஹிட்டானது. இளையராஜா இசையில் 'தண்ணி கருத்திருச்சு, வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா' பாடல் இன்னும் படத்துக்கு வலு சேர்த்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !