தமிழ் ஆவணப்படத்திற்கு தேசிய விருது
72வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் படங்களுக்கு 10 விருதுகள் கிடைத்தது. இதற்கு ஊடாக 'லைப் இன் லூம்' என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இதனை பல தமிழ் படங்களை தயாரித்த மார்க் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. ஒரு மணி 40 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் தமிழ், இந்தி, அசாமி, வங்காளம், லடாகி, ரெமோ மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகி உள்ளது. எட்மண்ட் ரான்சன் என்பவரே ஒளிப்பதிவு செய்து, இயக்கி உள்ளார். இப்படத்தை பிரான்சிஸ் மார்கஸ் தயாரித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் எட்மண்ட் ரான்சன் கூறும்போது “ இந்தியாவின் ஏழு மாநிலங்களில் வாழும் நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, நாட்டின் பாரம்பரிய கைத்தறி கலாச்சாரத்தை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது. குஜராத்தின் அரச மரபு கொண்ட பதன் படோலா நெசவு முதல், ஒடிசாவின் போண்டா பழங்குடியினரின் ரிங்கா நெசவு வரை பல்வேறு நெசவு மரபுகளை இப்படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
விரைவான சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியிலும், பல நூற்றாண்டுகள் பழமையானதும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமான நெசவு முறைகளைக் காக்கப் போராடும் கைவினைஞர்களின் மன உறுதியை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது.
85 நாட்களுக்கும் மேலாக பயணம் செய்து படப்பிடிப்பு நடத்தி, பாரம்பரிய நெசவாளர்களின் வாழ்க்கை, இயற்கையுடனான அவர்களின் உறவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த நெசவு முறைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நடைபெற்ற திரைப்பட விழாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. 72வது தேசிய திரைப்பட விருது கிடைத்திருப்பது உயரிய அங்கீகாரம். என்றார்.