உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே உணவுப் பற்றாக்குறை பற்றிய சீர்திருத்த சினிமாப் பாடல்

பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே உணவுப் பற்றாக்குறை பற்றிய சீர்திருத்த சினிமாப் பாடல்


திரைப்படங்களில் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் ஒரு சினிமாப் பாடல் என்பது, பார்க்கும் பார்வையாளர்களின் மனங்களை மகிழச் செய்வது, குதூகலிக்கச் செய்வது என நின்று விடாமல், அந்தப் பாடல் சமூகத்திற்கு நற்பண்புகளை, நற்சிந்தனைகளை, சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைத்து, மக்களின் மனங்களில் அவைகளை விதைக்கச் செய்யும் ஒரு கருவியாக செயல்பட வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் செயல்பட்டு, பாடல்களை உருவாக்கித் தந்த அக்கால தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சமூகப் பார்வை எப்போதும் இருந்ததுண்டு.

அந்த வகையில் 1950களின் ஆரம்பத்தில் வெளிவந்த “சிங்காரி” என்ற திரைப்படத்தில் அரிசி பற்றாக்குறையால் மக்கள் கோதுமை, மைதா போன்ற உணவுப் பொருள்களை நாடியிருந்த நிலையில், அதை மையப்படுத்தி நகைச்சுவையாக சொல்ல முயன்ற ஒரு பாடலைப் பற்றிய செய்திதான் இது.

பழமையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நடராஜ முதலியாரின் ஒரே மகன் சிவா தந்தையின் விருப்பத்திற்கு மாறாக வெளிநாடு சென்று மேற்படிப்பு பயில்கின்றார். ஏழ்மையில் வாடும் பசுபதி முதலியார் பஞ்சம் பிழைப்பதற்காக தனது ஒரே மகள் தங்கத்துடன் பட்டணம் வருகின்றார். யாரோ சிலர் வங்கியில் திருட, பசுபதி முதலியார் போலீஸில் அகப்பட்டு தண்டனை பெறுகின்றார். அனாததையாக தெருவில் நின்ற தங்கத்தை, நடராஜ முதலியார் வளர்க்கின்றார் பத்மினி என்ற பெயரில். பத்மினியின் பள்ளித் தோழி செல்லம். ஏழாண்டுகளுக்குப் பின் பள்ளிக்கூட விழா நாட்டிய நாடகத்தில் நடிக்கும் செல்லத்தை தன் நாடகக் குழுவில் சேர்த்துக் கொள்கின்றான் 'ஆனந்த நிலையம்' நாடக சபா உரிமையாளன் நித்யானந்தம். பின் செல்லம் 'சிங்காரி' ஆகின்றாள்.

இயக்குநர் டி ஆர் ரகுநாத் இயக்கத்தில், 'நேஷனல் புரொடக்ஷன்ஸ்' சார்பில் தயாரித்து வெளியிட்ட 'சிங்காரி'யின் கதை இதுதான். இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களில் ஒன்றுதான், நகைச்சுவை நடிகர் காகா ராதாகிருஷ்ணனும், நடிகை ராகினியும் தெருவில் ஆடிப் பாடி பிழைப்பு நடத்துவது போன்ற ஒரு காட்சியில் வரும் பாடல். “ஆவோ மகராஜ்! மேலே பகவான், கீழே மனுஷாளுங்கோ, அந்த மனுஷாளும் பத்து மாசத்திலே பொறந்தவங்கோ! ஊபர்கி சவுகார் வசிக்கிறாங்கோ, ஒட்டுத் திண்ணையிலே நம்பாள் படுக்கிறாங்கோ, அங்கே ஓவலும் விம்டாவும் விழுங்கிறாங்கோ, இங்கே ஒருவர் பூவாவுக்குத் ததிங்கிணத்தோம் போடுறாங்கோ, ஒரு ஜான் வயிறே இல்லாட்டா இந்த உலகினில் ஏது கலாட்டா, உணவுக்குப் பஞ்சமே வராட்டா - நம்ம உயிரை வாங்குமா பரோட்டா?” என்ற பாடல்.

அரிசி பற்றாக்குறையின் காரணமாக, அந்தக் காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் கோதுமை தானியமும், மைதா மாவும் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. சப்பாத்தியையும், பரோட்டாவையும் தமிழக மக்கள் அதிசயத்தோடும், வேதனையோடும் சந்தித்திருந்த நேரத்தில் வந்த இந்தப்பாடல் அன்றைய ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட ஒரு பாடலாக இருந்தது. குறிப்பாக கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனை வெகுவாக கவர்ந்த ஒரு பாடலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !