உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஜமவுலியின் வாரணாசி தலைப்பு சிக்கல் தீர்ந்தது

ராஜமவுலியின் வாரணாசி தலைப்பு சிக்கல் தீர்ந்தது

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கும் தனது அடுத்த பிரமாண்ட படத்திற்கு வாரணாசி என்று என்று தலைப்பு அறிவித்தார் ராஜமவுலி. ஆனால், இந்தத் தலைப்பை தயாரிப்பாளர் சுப்பா ரெட்டி என்பவர் ஏற்கனவே தெலுங்கு வர்த்தக சபையில் பதிவு செய்திருந்தார். திரைப்பட வர்த்தகச் சபையின் விதிகளின்படி, ஏற்கனவே பதிவில் இருக்கும் ஒரு தலைப்பை மற்றொரு தயாரிப்பாளருக்கு வழங்க முடியாது.

இருப்பினும், இயக்குனர் ராஜமவுலி தனது புதிய படத்துக்கு இந்த வாரணாசி என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த நடவடிக்கை தெலுங்கு திரைப்பட வர்த்தகச் சபை மற்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கிடையே மோதலை உருவாக்கியது. இந்நிலையில் தற்போது இந்த டைட்டில் விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. ராஜமவுலியின் வாரணாசி படத் தயாரிப்பாளர்களிடம் இந்தத் தலைப்பை ஒப்படைக்க சுப்பா ரெட்டி ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த முடிவை உறுதிப்படுத்திய தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் டி. பிரசன்ன குமார், இந்த விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதாகக் கூறியதுடன், சுப்பா ரெட்டியின் இந்த நற்செயலையும் பாராட்டினார். இந்த சிக்கல் தீர்ந்துள்ள நிலையில், வாரணாசி படம் எந்தவொரு சட்டரீதியான தடைகளும் இன்றி அதிகாரப்பூர்வமாக 2027 ஏப்ரல் 7 அன்று திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !