என் மகனின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்: ஜாய் கிறிஸ்டில்லா பதிவு
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டாவை அவர் நடிகரும், சமையற்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பாலியல் குற்றம் சாட்டும் வரை யாருக்கும் தெரியாது. தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியபோது அவர் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
கிறிஸ்டில்லா குற்றச்சாட்டை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்ததோடு அவர் வயிற்றில் வளர்வது என் குழந்தையே இல்லை என்றார். ஆனாலும் கிறிஸ்டில்லா சட்டப்போராட்டம் நடத்தி மரபனு சோதனை வரை சென்று தன் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்று நிரூபித்தார். இப்போது வேறுவழியின்றி மகனை ஏற்றுக் கொண்ட ரங்கராஜ், மகனுக்காக வாழப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தற்போது கிறிஸ்டில்லா வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகனின் உரிமைக்காக தொடர்ந்து போராடப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள், முடியாத கேள்விகள் மற்றும் ஒரு தாயால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்த போராட்டங்களுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. உலகிற்கு நான் காட்டிய ஒவ்வொரு சிரிப்புக்குப் பின்னாலும் ஆயிரம் துளிக் கண்ணீர் மறைந்திருந்தது.
எனது மகன், ஒவ்வொரு குழந்தையும் பெறத் தகுதியான அவனுக்கான சரியான அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை இறுதியாகப் பெற்றுவிட்டான். மக்கள் தலைப்புச் செய்திகளைப் பார்த்தார்கள். மக்கள் கருத்துகளைப் பார்த்தார்கள். மக்கள் சமூக வலைத்தளங்களைப் பார்த்தார்கள். ஆனால், அமைதியில் கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை.
தன்னையே கேள்வி கேட்டுக்கொண்ட ஒரு தாயைப் பார்க்கவில்லை. தன் குழந்தைக்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்து நின்ற ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை. இந்தப் பயணம் யார் சரி, யார் தவறு என்று நிரூபிப்பதற்கானது அல்ல. இது எப்போதுமே ஒரு குழந்தைக்குச் சேர வேண்டிய அங்கீகாரம், அன்பு மற்றும் பாதுகாப்பிற்கானது.
இது எதையோ நிரூபிப்பதற்காக அல்ல. நான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகப் போராடவில்லை. என் மகன் ராகா ரங்கராஜ் ஒருநாள் விழித்தெழுந்து தன் சுயமரியாதையைக் கேள்வி கேட்கும் நிலை வரக்கூடாது என்பதற்காகவே நான் போராடினேன்.
இன்று, அவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன். இது எப்போதுமே ஒரு தாய் தன் மகனுக்குக் கொடுத்த வாக்குறுதி சார்ந்த விஷயம். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக மாறினாலும், உனக்குச் சேர வேண்டிய உரிமைகளுக்காகப் போராடுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை மாதக்கணக்கில் சுமந்த பிறகு, இன்று என் இதயம் இறுதியாக அமைதியடைந்துள்ளது. இனி யாராவது என்னிடம் என் வாழ்வின் மிகப்பெரிய சாதனை எது என்று கேட்டால், என் பதில் புகழோ, வெற்றியோ அல்லது அங்கீகாரமோ அல்ல. என் பதில் எப்போதுமே இதுவாகத்தான் இருக்கும். என் மகனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினேன். என பதிவிட்டிருக்கிறார்.