காக்க காக்க படத்துக்கு வயது 23 : சூர்யா கேரக்டரில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
எஸ் தாணு தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த காக்க காக்க படம் ஆகஸ்ட் 1, 2023ம் ஆண்டு வெளியானது. இன்று அந்த படத்தின் வயது 23.
* போலீஸ் என்கவுன்ட்டர் சம்பவங்களை பேப்பரில் படித்தபோது கவுதம் மேனுக்கு தோன்றிய ஐடியாவே காக்க காக்க கரு. இந்த படத்துக்கு முதலில் பாத்தி, வயல் என பல்வேறு தலைப்புகள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், கந்த சஷ்டி கவசத்தில் வரும் காக்க காக்க என்ற தலைப்பு இறுதி செய்யப்பட்டது.
*மின்னலே படத்துக்குபின் கவுதம் மேனன் இயக்கிய படம் இது. அந்த காலத்தில் பிலிமில்தான் படமாக்கப்பட்டது.
* கதையில் முதலில் நடிக்க வந்தவர் ஜோதிகாதான். அன்புசெல்வன் என்ற ஹீரோ கேரக்டருக்கு முதலில் மாதவனிடம் பேசியிருக்கிறார்கள். அடுத்து அஜித், விக்ரம், விஜயிடமும் இந்த கதை சென்றது. ஆனால், அவர்கள் தயங்க, ஜோதிகா சிபாரிசில் சூர்யாவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் கவுதம் மேனன்.
* அந்த சமயத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா வெற்றி பெற்று இருக்க, அவரை நடிக்க வைக்க தயாரானார் கவுதம் மேனன். அப்போது யுனிவர்சிட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்த ஜீவனை 'பாண்டியா' என்ற வில்லனாக நடிக்க வைத்தார். அந்த கேரக்டருக்கு கவுதம் மேனனே குரல் கொடுத்தார்.
* துாது வருமா பாட்டுக்கு யாரும் எதிர்பார்த்திராத வகையில் கவர்ச்சியாக ஆட்டம் போட்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன். நிதி சிக்கல்கள் காரணமாக, அந்த பாடலை தனது சொந்த செலவில் கவுதம் மேனன் எடுத்ததாக தகவல்.
* போலீஸ் ஆபீசர் கேரக்டருக்காக, அப்போதைய பிரபல போலீஸ் ஆபிசர்கள் விஜயகுமார், சைலேந்திர பாபு ஆகியோரிடம் பல விஷயங்களை கேட்டு தெரிந்தார் சூர்யா.
* முக்கியமான காட்சிகளை சென்னையிலும், கிளைமாக்சை காளஹஸ்தியிலும் சண்டைக்காட்சிகளை இலங்கையிலும், சூப்பர் ஹிட்டான உயிரின் உயிரே பாடல்காட்சியை அந்தமானிலும் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.
* என்னை கொஞ்சம் மாற்று பாடலை எடிட் செய்ய வந்தவர் ஆண்டனி, அவரின் புது பாணி, ஸ்டைல் கவுதம் மேனனுக்கு பிடிக்கவே அவரையே எடிட்டர் ஆக்கினார். ஆங்கிலோ இந்தியரான ஆண்டனி எங்கள் சங்கத்தில் உறுப்பினர் இல்லை. அவர் பணியாற்றக் கூடாது என்று எடிட்டர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்க, தயாரிப்பாளர் தாணு தலையிட்டு அதற்கு தீர்வு கண்டார்.
* காக்க காக்க தமிழில் சூப்பர் ஹிட்டானது. 200 நாட்கள் ஓடியது. தெலுங்கில் ' கர்ஷனா' (2004), இந்தியில் ' போர்ஸ் ' மற்றும் கன்னடத்தில் 'தண்டம் தசகுணம்' (இரண்டும் 2011) ஆகிய தலைப்பில் ரீமேக் ஆனது. தெலுங்கில் கவுதம் மேனன் இயக்க வெங்கடேஷ், அசின் நடித்தனர், கன்னடத்தில் துருவா சார்ஜா, ரம்யா நடித்தனர், ஹிந்தியில் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடித்தனர்.
* காக்க காக்க படத்தின் வெற்றிக்கு முக்கியமான இன்னொரு காரணம், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள். தாமரை வரிகளில் பாடல்கள் பிரபலமாகின. தூது வருமா பாடலை சுனிதா சாரதி மற்றும் பேபி மணி பாடியுள்ளனர். என்னைக் கொஞ்சும் பாடலை திப்பு , டிமி மற்றும் பாப் ஷாலினி பாடியுள்ளனர். ஒன்றா ரெண்டா பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாட, ஒரு ஊரில் பாடலை கார்த்திக் பாடியுள்ளார். உயிரின் உயிரே பாடலை கே, சுசித்ரா பாடி அசத்தினார்.
* காக்க காக்க பார்ட் 2 எடுக்க சில திட்டம் இருந்ததாம். ஆனால், அடுத்து சிங்கம் போலீஸ் கதைகளில் பிஸியாக அது கை விடப்பட்டது.
* காக்க காக்க வெற்றிக்குபின் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா இணைந்து நடிக்கவில்லை. ஆனால், அவர் இயக்கத்தில் சூர்யா வாரணம் ஆயிரம் படத்திலும், ஜோதிகா பச்சைக்கிளி முத்துசரம் படத்திலும் நடித்தனர்.
* போலீசை, போலீஸ் ஆபீசர்களை நெகட்டிவ் ஆக காண்பித்த சினிமா மத்தியில், அவர்களின் கடமை உணர்வு, குடும்பம், தியாகத்தை பாசிட்டிவ்வாக காண்பித்தது காக்க காக்க. கிளைமாக்சில் சூர்யா வரும் காட்சியை பார்த்து பல போலீசார், போலீஸ் குடும்பங்கள் அழுததும் உண்டு.