மோகன்லாலின் கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளரின் கார் தீ வைத்து எரிப்பு
மலையாள திரையுலகில் தயாரிப்பாளரும் இயக்குனருமான விஜீஸ் மணி என்பவர், தோடர், இருளர் இனப் பழங்குடியினரை மையப்படுத்திய படங்களை இயக்கியும் தயாரித்தும் வருபவர். ஒரு சாதனை முயற்சியாக கடந்த 2009ல் மோகன்லாலை வைத்து இவர் தயாரித்த 'பகவான்' என்கிற திரைப்படம் வெறும் 19 மணி நேரத்தில் படமாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்தது.
தற்போது விஜீஸ் மணி புதிய படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு அருகே உள்ள முத்துவாட்டூரில் உள்ள விஜீஸ் மணியின் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது ஜீப், திடீரென அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தனது புதிய படம் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் இருந்ததாகவும், அவை தீயில் எரிந்து போனதால் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாவும் தனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக விஜீஸ் மணி கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் கேரள உள்துறைக்கு மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளது.