பிளாஷ்பேக்: இந்த துணிச்சல் யாருக்கு வரும்
வீணை இசை கலைஞரான எஸ்.பாலச்சந்தர், தமிழ் சினிவிற்கு திரில்லர் படங்களை அறிமுகப்படுத்தியவர். ஆங்கில படங்களின் பாணியில் இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதுமையை செய்வார். 1962ம் ஆண்டு அவர் இயக்கிய 'அவனா இவன்' என்ற படத்திலும் அவர் ஒரு புதுமையை செய்தார். அதை கடைசியில் பார்க்கலாம்.
1951ம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான 'எ பிளேஸ் இன் தி சன்' படத்தின் பாதிப்பில் உருவாக்கப்பட்ட படம்தான் 'அவனா இவன்'. இந்த படத்தில் எஸ்.பாலச்சந்தர் நாயகனாகவும், வசந்தி நாயகியாகவும் நடித்தனர். இவர்களுடன் மாஸ்டர் ஸ்ரீதர், பேபி பத்மினி, எஸ்.என்.லட்சுமி, சி.கே.சரஸ்வதி, செருகளத்தூர் சாமா, வி.எஸ்.ராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
குமார் (எஸ். பாலச்சந்தர்) தன் மனைவி சுமதியைக் (லட்சுமி ராச்சியம்) கொன்று, வசந்தி என்ற வேறொரு பெண்ணை மணக்கிறார். இந்தக் கொலையை சுற்றுலா வரும் இரண்டு குழந்தைகள் (பேபி பத்மினி- மாஸ்டர் ஸ்ரீதர்) பார்த்துவிடுகின்றனர். அவர்கள் கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவுகின்றனர். இறுதியில், குமார் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் எஸ்.பாலச்சந்தர் செய்த புதுமை என்ன தெரியுமா? அவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். அதனால் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைளுக்கு அவர்களை ஒப்பந்தம் செய்த உடனேயே அவர்கள் கையில் தான் கையெழுத்திட்ட நிரப்பப்படாத காசோலையை கொடுத்தார். “உங்கள் உழைப்புக்கான சம்பளத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு தொகை என்று நீங்களே குறிப்பிட்டு வங்கியில் செலுத்தி, எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார்.
அதோடு இந்த படத்தில் இன்னொரு புதுமையும் உண்டு. படம் தொடங்கும்போது டைட்டில் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் படத்தின் நடுவில் முக்கியமான இடத்தில் டைட்டில் கார்டு போட்டும் புதுமை செய்தார்.