பிளாஷ்பேக்: எம்ஜிஆருக்கு மருமகன் ஆன கே.பாக்யராஜ்
எம்ஜிஆர் சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது சிறிய பட்ஜெட்டில் காதல் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் ஸ்ரீதர். ஆனால் ஒரு கட்டத்தில் சொந்த படங்களால் ஸ்ரீதர் சொத்துகளை இழந்தபோது அவருக்கு உதவ முன்வந்தார் எம்ஜிஆர். முதல் படமாக ஸ்ரீதர் இயக்கத்தில் 'உரிமைக்குரல்' உருவாகி வெள்ளி விழா கொண்டாடியது. அடுத்த படமான 'மீனவ நண்பனும்' வெற்றி பெற்றது. இதன்பிறகு ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த படம் 'அண்ணா நீ என் தெய்வம்'.
இந்தப் படம் அண்ணன், தங்கை பாசத்தைக் கொண்ட கதையாகவும் பழிவாங்கும் கதையாகவும் சேர்த்துப் பின்னப்பட்டிருந்தது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து அரசியலில் முழு மூச்சாக இறங்கியிருந்தார். அதேசமயம் படங்களிலும் நடித்து வந்தார். 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தில் நடிக்க முடிவு செய்தார். பட பூஜை போடப்பட்டது. படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகமெங்கும் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கினார். தேர்தல் வந்தது. எம்ஜிஆர், முதல்வர் ஆனார்.
25 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில் படம் நின்று போனது. இது நடந்தது 1977ம் ஆண்டு. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை மீண்டும் கையில் எடுத்தார் கே.பாக்யராஜ். எம்ஜிஆர் நடித்திருந்த காட்சிகளையும் 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தின் மற்ற காட்சிகளையும் பார்த்தார் பாக்யராஜ்.
இதையடுத்து, ஒரு கதையை ரெடி செய்தார். அந்தக் கதைக்குள் 'அண்ணா நீ என் தெய்வம்' படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகளைச் சேர்த்தார். 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தில் எம்ஜிஆர் நாயகன். அவரை தாய்மாமனாக்கினார். எம்ஜிஆரின் தங்கை சங்கீதாவின் மகனாக பாக்யராஜ் நடித்தார். படத்தின் டைட்டிலை 'அவசர போலீஸ் 100' என்று வைத்தார். இரண்டு வேடங்களில் கே.பாக்யராஜ் நடிப்பதாக திரைக்கதை அமைத்தார்.
இந்த முயற்சிக்கு முதலில் எம்ஜிஆர் சம்மதிக்கவில்லை. 'இது வேண்டாத வேலை' என்றே சொன்னார். ஆனால் பாக்யராஜ் எழுதிய புதிய திரைக்கதையை பார்த்தும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். ஆனால் 1990ல் படம் வெளிவரும்போது எம்ஜிஆர் உயிரோடு இல்லை. படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால் இதே கதை 1994ம் ஆண்டு 'கோபி கிருஷ்ணா' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.