இந்தியாவில் 500 கோடி வசூலைக் கடந்த 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே'
இந்தியத் திரையுலக வரலாற்றில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று 500 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. டெஸ்டின் டேனியர் கிரெட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலந்த் நாயகனாக நடிக்க 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' படம் கடந்த ஜூலை 31ம் தேதி வெளியானது.
இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. படம் வெளியான 11 நாட்களில் இந்தியாவில் 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் எந்த ஒரு ஹாலிவுட் திரைப்படமும் பெறாத ஒரு வசூல் இது.
இதற்கு முன்பு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படங்களில், 2022ல் வெளிவந்த 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம் சுமார் 490 கோடி வசூலித்திருந்த சாதனையை இப்படம் முறியடித்துள்ளது.
2019ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் எண்ட் கேம்' படம் 440 கோடியும், 2018ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் 290 கோடியும், 2021ல் வெளிவந்த 'ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்' படம் 270 கோடியும் வசூலித்து டாப் 5 இடங்களில் உள்ளன.
கடந்த 11 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 1.6 பில்லியன் வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 15,200 கோடி.
உலக அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் தற்போது 12வது இடத்தில் இப்படம் உள்ளது. 2009ல் வெளிவந்த 'அவதார்' திரைப்படம் 2.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 27,800 கோடி.