ரசிகர்கள் தள்ளுமுள்ளு, போக்குவரத்து நெரிசல்: ஹிப்ஹாப் ஆதி நிகழ்ச்சி நிறுத்தம்
ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்துள்ள படம் 'மீசைய முறுக்கு 2ம் பாகம்'. இந்த படத்தின் புரமோசன் நிகழ்வுகளை ஆதி தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக படத்தின் புரோமோ நிகழ்வு ஒன்றை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வர மாட்டார்கள். மாலில் ஏற்கெனவே இருக்கும் மக்களுக்கு சர்ப்பரைசாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.
ஆனால் இந்த நிகழ்வுக்கு ஆதியின் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் பல இடங்களில் இருந்து வாகனங்களில் ரசிகர்கள் மாலில் கூடினர். இதனால் மாலின் வெளியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழா நடக்கும் இடத்தில் கூட்டம் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து மால் நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் நிகழ்ச்சி நடத்த தடை விதித்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர்.
சென்னையின் முக்கிய பகுதியாக இருப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்நிகழ்வை ரத்து செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து தனது சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டுள்ள ஆதி, “இந்த கொண்டாட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க மிகுந்த ஆவலோடு வந்திருந்தேன். ஆனால் உங்களுடைய பாதுகாப்பு கருதியும், காவல்துறையின் அறிவுறுத்தலின்படியும் என்னால் மேடை ஏற முடியவில்லை. உங்கள் கட்டுக்கடங்காத அன்பு ஒருபுறம் மகிழ்ச்சி தந்தாலும், உங்களோடு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம்” என்று பேசியிருக்கிறார்.