உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகராக 67ல் அடியெடுத்து வைத்த கமல் : இதேநாளில் வெளியான ‛களத்துார் கண்ணம்மா' பற்றி ஒரு பார்வை...!

நடிகராக 67ல் அடியெடுத்து வைத்த கமல் : இதேநாளில் வெளியான ‛களத்துார் கண்ணம்மா' பற்றி ஒரு பார்வை...!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடனக்கலைஞர் என கமல்ஹாசனின் சினிமா சாதனைகள் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்று நடிகராக அவர் 66 ஆண்டுகளை நிறைவு செய்து 67வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் அவர்தான் சீனியர் எனலாம். அதென்ன 66வது ஆண்டு என்கிறீர்களா? ஏவிஎம் தயாரிப்பில் பீம்சிங் இயக்கத்தில் கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன படம் ‛களத்துார் கண்ணம்மா'. 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளயானது. அந்தவகையில் நடிகராக 66 ஆண்டை நிறைவு செய்து 67ல் அடி எடுத்து வைத்து இருக்கிறார் கமல்ஹாசன்.

* களத்துார் கண்ணம்மா படத்தில் முதலில் டெய்சி என்ற குழந்தை நட்சத்திரம் நடிப்பதாக இருந்தது. ஆனால், சாரா என்ற மருத்துவர் மூலமாக துறுதுறுவென இருந்த கமல்ஹாசனை பார்த்த ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அவரை நடிக்க வைத்தார். கமல்ஹாசனை நடிக்க சொன்னபோது மேஜையில் ஏறி வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசனம் பேசியிருக்கிறார். அந்த குழந்தையின் திறமை பார்த்து வியந்த ஏவிஎம் செட்டியார் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். இன்றுதான் அவரின் 47வது நினைவுநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



* களத்துார் கண்ணமா படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி மகனாக செல்வம் என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்தார் கமல்ஹாசன். அப்போது வயது 4. இந்த படத்தை பீம்சிங் இயக்கினார். முதலில் இப்படத்தை பிரகாஷ் ராவ் தான் இயக்கினார். கருத்து வேறுபாடு காரணமாக இவர் விலகினார். இவர் எல்.வி.பிரசாத்தின் உதவியாளர். பிற்காலத்தில் எம்ஜிஆர் நடித்த படகோட்டி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவரின் உதவியாளர் தான் இயக்குனர் ஸ்ரீதர்.

* களத்துார் கண்ணம்மா படத்தில் 4வது அசிஸ்டென்ட் ஆக உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் எஸ்பி. முத்துராமன், பிற்காலத்தில் கமல்ஹாசனை வைத்து சகலகலா வல்லவன், பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். முதல் படத்தில் கமலுக்கு அப்பாவாக நடித்த ஜெமினி கணேசன் பின்னாளில் கமலின் அவ்வை சண்முகி படத்தில் நடித்தார். இதுவே இவரது கடைசி படமாக அமைந்தது.

* 100 நாட்கள் ஓடிய 'களத்தூர் கண்ணம்மா' படம், 'நோபடீஸ் சைல்ட்' என்கிற சீன மொழிப் படத்தின் தாக்கத்திலிருந்து உருவானது. 'தென்னகத்துத் திரைவானுக்கு ஏ.வி.எம். அளிக்கும் குழந்தை நட்சத்திரம்' என்கிற டைட்டில் கார்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் 'கமல்ஹாசன்'.

* களத்துார் கண்ணம்மா படம் மவூரி அம்மாயி எனும் பெயரில் தெலுங்கு மொழியிலும், மெயின் சுப் ரஹுங்கி எனும் பெயரில் ஹிந்தி மொழியிலும் எடுக்கப்பட்டது. சிங்கள மொழியிலும் கூட மங்கலிக்கா எனும் பெயரில் எடுக்கப்பட்டது. மீண்டும் இதே கதை தெலுங்கு, ஹிந்தியில் படமானது தனிக்கதை.



*கமல்ஹாசன் முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி விருது (தேசிய விருது) அப்போதைய ஜனாதிபதியான ராதா கிருஷ்ணனிடமிருந்து பெற்றார். 1960ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதும் இப்படம் பெற்றது.

* களத்துார் கண்ணம்மா படத்தில் சாவித்ரி மகனாக நடித்தார் கமல்ஹாசன். அனாதை ஆசிரமத்தில் அம்மா யார் என்று தெரியாமல் வளரும் குழந்தை. அங்கே பணியாற்றும் சாவித்ரிக்கும் மகன் என்று தெரியாது. ஒரு காட்சியில் அவர் உப்புமா ஊட்டிவிட வேண்டும். கமல் சாப்பிடாமல் அடம்பிடிக்க, படக்குழுவினர் அது பற்றி விசாரிக்க, இங்கே மாந்தோப்பில் டூப்ளிகேட் மாங்காய் இருக்கிறது. இதுவும் டுப்ளிகேட் உப்புமா என சொல்லியிருக்கிறார். பிறகு சாவித்ரி உட்பட பலரும் நிஜ உப்புமா என சாப்பிட்டு காட்டியபிறகே அவர் சாப்பிட்டு இருக்கிறார்.

* களத்துார் கண்ணம்மா படத்தில் சிறுவனாக கமல்ஹாசன் பாடும் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் பிரபலம். ஆனால், அந்த பாடலால் ஏற்பட்ட பிரச்னையால்தான் இயக்குனர் பிரகாஷ்ராவ் விலகினார். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலை படமாக்கும்போது, இது சின்ன பையன் பாடும் பாட்டு 4 நிமிடங்கள் யாரும் ரசிக்க மாட்டார்கள். அதை ஒன்றரை நிமிடமாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் பிரகாஷ் ராவ் கூறியுள்ளார். இதை கேட்டு, எடிட்டரும் ஒன்னறை நிமிடமாக மாற்றியுள்ளார். எடுத்தவரை படத்தை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், என்ன 4 நிமிட பாட்டு ஒன்றரை நிமிடம் தான் இருக்கு என்று கேட்க அதனால் ஏற்பட்ட பிரச்னையால் அவர் விலகியிருக்கிறார். மீதியை பீம்சிங் இயக்கியிருக்கிறார்.



* அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலை டி.கே.சுந்தர வாத்தியார் எழுத, எம்.எஸ்.ராஜேஸ்வரி குழந்தை குரலில் பாடியிருக்கிறார். அந்த பாடலில் முருகரை புகழ்ந்து, போற்றி பாடுவதாக வரிகள் அமையும். முதல் படத்தில் ஆத்திகராக பாடிய கமல்ஹாசன், பிற்காலத்தில் நாத்திகராக மாறியது விந்தை.

* சாவித்ரி உடன் பார்த்தால் பசி தீரும் (1962) என்ற படத்திலும் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கமல் நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979) படத்தில் சாவித்ரி முக்கியமான ரோலில் நடித்தார். 26 ஆண்டுகள் கழித்து பாலசந்தரின் உன்னால் முடியும் தம்பி படத்தில் கமல் தந்தையாக ஜெமினி கணேசன் நடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !