பாலிவுட் இளம் நடிகை அனன்யா ராஜ் மரணம் : ஒரு மாதத்திற்கு பிறகு குடும்பத்தினர் அறிவிப்பு
வளர்ந்து வந்த இளம் பாலிவுட் நடிகை அனன்யா ராஜ். 2016ம் ஆண்டில் வெளியான '7 ஹவர்ஸ் டு கோக்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், 'தி பைனல் எக்ஸிட்', 'கோஸ்ட்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
பாலிவுட் படங்களை தாண்டி முன்னணி நிறுவனங்களின் இசை வீடியோக்களிலும், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் 2022ம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கத்தில் நவீன் சந்திராவுடன் இணைந்து 'தக்கடே லே' என்ற திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். மேலும், அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கி இயக்கத்தில் அஷ்மித் பட்டேல், அத்யாயன் சுமன் ஆகியோருடன் இணைந்து 'மெட்ராசி கேங்' படத்திலும் நடித்தார்.
35 வயதான அனன்யராஜ் மரணம் அடைந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாங்கள் அனன்யாவின் குடும்பத்தினர். மிகுந்த வலியுடன் இந்த தகவலைத் தெரிவிக்கிறோம். ஜூலை 15-ம் தேதி அதிகாலையில் அனன்யா உயிரிழந்தார். தூக்கத்திலேயே அமைதியாக அவரது உயிர் பிரிந்தது. கடந்த சில வருடங்களாக அவர் மனரீதியான, உடல் ரீதியான பிரச்சினைகளுடன் போராடி வந்தார். அதிலிருந்து மீண்டு வர ஒரு வீராங்கனையைப் போல அவர் போராடினார்.
மன உறுதி மிக்க பெண்ணான அவர் ஒரு ராணியைப் போல வாழ்ந்தார். மகளே... உன் வெறுமையை வெகுவாக உணருகிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். இக்கட்டான இந்தச் சூழலில், நாங்கள் அமைதியையும், தனிமையும் வேண்டுகிறோம். என்று தெரிவித்துள்ளனர்.
அனன்யா ராஜ் கடந்த ஜூலை 15ம் தேதியே இறந்துள்ளார். சரியாக ஒரு மாதம் கழித்து இந்த தகவலை அவரது குடும்பத்தினர் வெளியே தெரிவித்துள்ளனர். இளம் வயதிலேயே நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.