உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காட்டு வேலை செய்யப் போறேன் : சாதனை படம் தோல்வியால் இயக்குனர் வேதனை

காட்டு வேலை செய்யப் போறேன் : சாதனை படம் தோல்வியால் இயக்குனர் வேதனை

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவான ‛ஒன்மேன்' படம் கடந்த வாரம் வெளியானது. தமிழ் சினிமா, இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவில் கூட இப்படிப்பட்ட சாதனை படம் வந்தது இல்லை என பலரும் பாராட்டினார்கள். காரணம் நடிப்பு இயக்கம், ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட 74 துறைகளை கையாண்டு சங்ககிரி ராஜ்குமார் இருந்தார். ஒருவர் மட்டுமே உருவாக்கி இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மறுநாளே பல தியேட்டர்களில் இருந்து படத்தை துாக்கி விட்டார்கள். இப்போது அவரும் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சங்ககிரி போய்விட்டார். அங்கே இருந்து அவர் வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவு...

‛‛ஒருவழியாக சென்னையில் இருந்து பேக்கப் பண்ணிட்டு ஊருக்கே வந்து சேர்ந்தாச்சு. இதுவரைக்கும் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கொடுத்த திரையுலகினர்கள், பத்திரிக்கை, ஊடகம் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்தப் படம் தொடங்கும் போது நட்ட மாஞ்செடி, தென்னஞ்செடி எல்லாம் இன்னைக்கு அட்லீஸ்ட் மாங்காய், தேங்காயாவது கொடுக்குது. நானும் தான் இரவு பகல் பாராமல், கடனை வாங்கிப் போட்டு உழைத்துக் கொட்டினேன். ஆனால், எதுவுமே இல்லாமல் வெறும் கையோடு ஊருக்குத் திரும்பியிருக்கோம்; வெறும் கையோடு வந்திருந்தாக்கூட பரவாயில்லை, கடனாளியாக மாறி வந்திருக்கிறேன்.

ஊரில் இந்த இடத்தில் எத்தனையோ ஷாட்ஸ் எடுத்திருக்கேன், இந்தச் சுவரில் சியாட்டிலில் தொங்குவதை மேட்ச் பண்ணி எல்லாம் எடுத்திருக்கிறேன். எந்த நம்பிக்கையில் இவ்வளவு உழைத்திருப்போம் என்று யோசிக்கும்போது, வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களுக்குப் போகும்போது அங்குள்ள ரசிகர்கள் பெரிய பட்ஜெட், நடுத்தர பட்ஜெட், ஜீரோ பட்ஜெட் என அனைத்தையும் பார்க்கிறார்கள். காசே இல்லாமல் எப்படி இதை எடுத்தீங்க? என்று ஆச்சரியத்தோடு ரசித்துப் பார்க்கிறார்கள்.

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவிற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு ஆப்பிரிக்க இயக்குனர், காருக்குள்ளேயே கேமரா வைத்து 4 கதாபாத்திரங்கள் பேசுவது போல ஒரு படத்தை எடுத்திருந்தார். அந்த நாட்டின் அரசே ஆட்களை அனுப்பி, அதை ஒரு அரங்கில் காட்சிப்படுத்தி விளம்பரம் செய்தது. நான் என் படத்தை பற்றி அவர்களிடம் சொன்னபோது அவர்கள் வியப்படைந்தார்கள். எங்கள் ஊரில் சிறிய முயற்சிக்கு இவ்வளவு செய்கிறோம், நீங்கள் இவ்வளவு பெரிய வேலையைத் தனியாகச் செய்திருக்கிறீர்கள், இதை உங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள் என்றார்கள்.

இங்கு திரையரங்குகளோ, நிறுவனங்களோ வியாபார நோக்கிலான படங்களை மட்டுமே கவனிக்கலாம். ஆனால், திரைப்பட வளர்ச்சித்துறை என ஒரு அரசு அமைப்பு இருக்கிறது. அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் நேரில் சந்தித்து இந்தப் படத்தைப் பற்றிக் கூறினேன். அரசாங்கத்திடமிருந்தோ அல்லது மக்களிடமிருந்தோ அங்கீகாரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இவ்வளவு உழைத்தோம். பத்திரிகைகளும் சமூக வலைத்தளங்களும் கொண்டாடினாலும், படத்தை உரிய இடத்திற்குக் கொண்டு சேர்க்க முடியவில்லை என்ற மிகப்பெரிய களைப்புடன் வந்து உட்கார்ந்துவிட்டோம்.

தியேட்டரில் இடம் கிடைக்கவில்லை என்றால் ஓடிடியில் (OTT) வெளியிடலாம் என்றால், தியேட்டராவது 1200 கதவுகள் இருக்கிறது, 50-60 திரைகள் பிடித்தோம். ஆனால், ஓடிடி என்பது 5 கதவுகள் மட்டுமே. அதுவும் மும்பை, டில்லி, ஐதராபாத் என எங்கோ இருக்கும் மாயக் கதவுகள். அங்கேயும் தியேட்டர் ரெஸ்பான்ஸ் என்ன? யார் நடிச்சிருக்கா? என்ன பேனர்? என்றுதான் கேட்கிறார்கள். என்ன சொல்கிறோம் என்பதை யாரும் கேட்பதில்லை; யார் சொல்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறார்கள். திரும்பத் திரும்பப் போய் ஏமாந்து நிற்க உடம்பில் தெம்பே இல்லை.

அதனால், வரும் வியாழக்கிழமை வாக்கில் இந்தப் படத்தை யூடியூபில் (YouTube) அப்லோட் பண்ணிடலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதன்பிறகு மக்கள் பார்த்துத் தீர்மானிக்கட்டும். கொஞ்சநாள் நிம்மதியாக, யாருடைய போன் அழைப்புக்காகவும் காத்திராமல், யாரிடமும் உதவி கேட்டு நிற்காமல் கொஞ்ச நாள் காட்டு வேலை, தெருக்கூத்து போன்றவற்றைச் செய்யலாம் என இருக்கிறேன். இதற்கெல்லாம் நாம் யாரிடமும் கையேந்தத் தேவையில்லை; தெருக்கூத்தில் நாம்தான் ராஜா, காட்டு வேலைக்கு நாம்தான் உழைப்பு.

அதேநேரம், சினிமாவை விட்டு வந்துவிட்டேன் என்றோ, இங்கேயே இருந்துவிடப் போகிறேன் என்றோ அர்த்தமில்லை. சென்னைக்கு வந்த நாள் முதல் என்னை ஆதரித்து வரும் பத்திரிகையாளர்களுக்காகவே, நான் ஒரு நல்ல கமர்சியல் வெற்றிப் படத்தைக் கொடுத்தே தீருவேன். ஆனால், அதற்கு முன்பு இதிலிருந்து மீண்டு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வது சரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !