பிளாஷ்பேக்: இயக்குநரான விஜய்யின் அம்மா ஷோபா
நடிகரும் இன்றைய முதல்வருமான விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அடிப்படையில் ஒரு கலை குடும்பத்தை சேர்ந்தவர். ஷோபா பாடகி மற்றும் வீணை இசை கலைஞர். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை திருமணம் செய்து பிறகு அவரது படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றினார். சட்டம் ஒரு இருட்டரை. நான் சிகப்பு மனிதன். சாட்சி போன்ற படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில் 1991ம் ஆண்டு 'நண்பர்கள்' என்ற படத்தை அவர் இயக்கினார். இதில் நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக், நாகேஷ், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். இது 90களில் இருந்த காதல், பிரிவு, கலாட்டாக்களை அடிப்படையாக கொண்டு உருவானது. சங்கீத ராஜன் பின்னணி இசையமைக்க, பாபு போஸ் பாடல்களுக்கு இசையமைத்தார்.
திமிர் பிடித்த பணக்கார நாயகி, நாயகனை அவமதிப்பதும், நாயகன் அவளை பழிவாங்குவதும், பிறகு இருவரும் காதலிப்பதுமான கதை. அதனை இளமையும், நகைச்சுவையும் ததும்ப தந்திருந்தார் ஷோபா. அன்றைய இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த படமாகவும் அமைந்தது. குறிப்பாக பாடல்கள் ஹிட்டாயின. படத்தின் நாயகனுக்கு விஜய் பெயரையே ஷோபா சூட்டியிருந்தார். இயக்குனர் ஷங்கர் இதில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்திருந்தார். டைட்டிலில் தனியாக அவரது பெயர் இடம்பெற்றிருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் அன்றைய இளைஞர்களிடம் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து 'இன்னிசை மழை' என்ற படத்தை இயக்கினார். இதில் நீரஜ், பர்வீன், விவேக், சுதாகர் வசந்த், சங்கீதா நடித்தனர். மகன் ஜோசப் விஜய் தயாரித்தார், இளையராஜா இசை அமைத்தார். இந்த படத்தின் டைட்டிலில் 'தயாரிப்பு ஜோசப் விஜய்' என இடம்பெற்றது.