சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
பிரபலமானவர்கள் தங்கள் சுயசரிதையை எழுதுவது இப்போது புதிய டிரெண்ட். காரணம் பல பதிப்பகங்கள் இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பளமும், விற்பனையில் பங்கும் தருகிறார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்த் தன் மகள் சவுந்தர்யாவுடன் இணைந்து தனது சுயசரிதையை எழுதி வருகிறார். இந்த வரிசையில் தற்போது இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருக்கிறார். பிரபல இந்தி பத்திரிகையர் ரூபா சக்வர்த்தியுடன் இணைந்து எழுதுகிறார்.
சுயசரிதைக்கு 'ரஹ்மான்: எ ரினைசன்ஸ்' என்று பெயர் வைத்துள்ளார். ரினைசன்ஸ் என்றால் 'மறுமலர்ச்சி' என்று பொருள். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து, 'ரஹ்மான்: எ ரினைசன்ஸ்' என்ற புத்தகத்தை எழுதி வருகிறேன். அவர் இதன் இணையாசிரியராக இருக்கிறார். என்னுடைய உலகை வடிவமைத்த இசை, சிந்தனைகள், சவால்கள், ஆளுமைகள் மற்றும் படைப்பாக்க பயணம் பற்றியதாக இந்த புத்தகம் இருக்கும். கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.