மோகன்லாலின் ‛ஆபரேஷன் கங்கா'
மோகன்லால் நடிக்கும் 367வது படத்திற்கு ‛ஆபரேஷன் கங்கா' என பெயரிட்டுள்ளனர். இதை விஷ்ணு மோகன் இயக்குகிறார். இது இவரது மூன்றாவது படமாகும். இவர் இயக்குநராக அறிமுகமான 'மேப்படியான்' திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றுள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார்.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், ஆதில் ஹுசைன், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். வெளிநாடு மற்றும் பாலிவுட்டை சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். ஷாஷ்வத் சச்தேவ் இசையமைக்கிறார்.
ரஷ்யா - உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆபரேஷன் கங்கா' மீட்புப் பணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. மோகன்லால் விரைவில் படப்பிடிப்பில் இணைகிறார். மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போலந்து, ஜார்ஜியா, கஜகஸ்தான், டெல்லி, டேராடூன் மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.