லோகேஷ் கனகராஜ் படத்தை கைவிட்ட அமீர்கான்: மற்றொரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கிறார்!
'கூலி' படத்திற்கு முன்பு, அமீர்கானும், லோகேஷ் கனகராஜூம் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கதை ரீதியிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது. தற்போது, அமீர்கான் வேறொரு இயக்குநருடன் மற்றொரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதாவது, தயாரிப்பாளர் சஜித் நதியாட்வாலா மற்றும் இயக்குநர் ஆர். பால்கியுடன் இணைந்து ஒரு பிரமாண்ட சூப்பர் ஹீரோ படத்துக்காக அமீர்கான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இயக்குநர் ஆர்.பால்கி, 'பா, ஷமிதாப், பேட்மேன்' என பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இப்படம் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது.
தற்போதைக்கு, அமீர்கானின் ஒரே உறுதி செய்யப்பட்ட படம் 'லல்காரா' ஆகும். இது 1952ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று விளையாட்டுத் திரைப்படமாகும். அசுதோஷ் கோவாரிகர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கவுள்ளது.