பேட்ரியாட் (மலையாளம்)
தயாரிப்பு : ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி
இயக்கம் : மகேஷ் நாராயணன்
நடிப்பு : மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், கிரேஸ் ஆண்டனி, ஷிவ்தா
ஒளிப்பதிவு : மனுஷ் நந்தன்
இசை : சுஷின் ஷ்யாம்
வெளியான தேதி : மே 1, 2026
நேரம் : 3 மணிநேரம்
ரேட்டிங் : 3.5 / 5
ராணுவத்தில் முறைகேடான நடவடிக்கைகளிலும் துரோகத்திலும் ஈடுபடும் அதிகாரிகளைக் கண்டுபிடிப்பதற்காக பெரிஸ்கோப் என்கிற சாப்ட்வேர் கண்டுபிடிக்கப்படுகிறது. இதன் செயல்படுத்தும் உரிமையை தனது மகன் நடத்தும் நிறுவனத்திற்கு தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பெற்றுத் தருகிறார் அமைச்சர் ராஜீவ் மேனன். ஆனால் தந்தையும் மகனும் சேர்ந்து அதை சில அமைச்சர்கள் மற்றும் நாட்டின் முக்கியப் புள்ளிகளின் அனைத்து தொலைபேசி மற்றும் சோஷியல் மீடியா நெட்வொர்க்கை கண்காணிப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர்.
இதில் சந்தேகம் அடையும் ராணுவ அமைச்சரான ரேவதி, தனக்கு பல வருட காலமாக அறிவியல் நுட்ப ஆலோசனை அதிகாரியாக இருக்கும் மம்முட்டியிடம் இது குறித்து உண்மையை அறிந்து தனக்கு ரிப்போர்ட் தரும்படி கூறுகிறார். அதேசமயம் மருத்துவமனையில் இருக்கும் அவர் அடுத்த ஓரிரு நாளில் இயற்கை மரணம் போல மர்மமாக இறக்கிறார். மம்முட்டியிடம் இருக்கும் ரிப்போர்ட் பற்றி அறிந்துகொண்ட இன்னொரு உயர் அதிகாரி, ராஜீவ் மேனனிடம் அது குறித்து உண்மையைச் சொல்ல, மம்முட்டியை ஒரு தேசத்துரோகி போலக் குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய ராஜீவ் மேனன் முயற்சிக்கிறார்.
ஆனால் அவருக்கு டிமிக்கி கொடுத்து லண்டனுக்குத் தப்பிச் செல்லும் மம்முட்டி, ஒரு யு டியூபராக மாறி அங்கிருந்தே ஒரு யு ட்யூப் சேனல் ஆரம்பித்து அறிவியல் சம்பந்தமான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுகிறார். ஆனால் அங்கிருந்து அவரை வரவழைத்துச் சிறையில் அடைக்கும் முயற்சியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மேற்கொள்கிறார் ராஜீவ் மேனன். அவரது ஆட்கள் மம்முட்டியை அவர் அறியாமலேயே சிறை பிடித்து விமானத்தில் ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் திட்டம் பலித்ததா? மம்முட்டி இவர்கள் சூழ்ச்சியில் இருந்து தப்பினாரா ? தந்தை - மகன் இருவரது மோசடியை அவரால் மக்களிடம் ஆதாரங்களோடு அம்பலப்படுத்த முடிந்ததா என்பது மீதிக்கதை.
கடந்த 2008ல் வெளியான 'ட்வெண்ட்டி - 20' திரைப்படம் தான் இதுவரை மலையாளத்தில் மிகப்பெரிய மல்டி ஸ்டார் படமாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்த இடத்தை இந்தப் பேட்ரியாட் திரைப்படம் பிடித்திருக்கிறது என்று சொல்லும் விதமாக மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா என பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள்.
ஆனாலும் படத்தின் ஹீரோ என்றால் அது மம்முட்டி தான். விரைவில் ஓய்வு பெறப்போகின்ற ஒரு அதிகாரியாக வயதுக்கேற்ற வேடத்தில் மம்முட்டி காண கச்சித்தமாக பொருந்தி இருக்கிறார். அறிவியல் ரீதியாக அவர் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுவதும், குறிப்பாக வில்லன்கள் இப்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரை முடக்க முயற்சிக்கும்போது, இதுபோன்ற டெக்னாலஜி வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் ராணுவத்தில் தாங்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் சாகசங்கள் நிகழ்த்துவது அடடே என ஆச்சரியப்படுத்துகிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் கொஞ்சம் கூட குறை வைக்கவில்லை. குறிப்பாக ஆகாயத்தில், பறக்கும் விமானத்தில் அவர் எதிரிகளுடன் மோதும் காட்சி செம விறுவிறுப்பு.
மோகன்லால் இடைவேளைக்குப் பிறகு கொஞ்ச நேரம் கழித்தே என்ட்ரி கொடுக்கிறார். மம்முட்டிக்குப் பின்னணியில் இருந்து மூளையாகச் செயல்படும் நபராக, அண்டர் கிரவுண்டிலேயே ஆல் ரவுண்ட் வேலைகளைப் பார்க்கும் மோகன்லால், ஒரு கால் இல்லாத ஊனமுற்ற முன்னாள் ராணுவ அதிகாரியாக ஒரு பக்கம் சிறப்பான நடிப்பையும், அதேசமயம் ஹாஸ்பிடலில் அதுவும் குறிப்பாக லிப்ட்டுக்குள் நடக்கும் மாஸ் ஆக்ஷன் காட்சியிலும் சம விகிதத்தில் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, கார் சேஸிங் காட்சி ஒன்றில் இவரும் மம்முட்டியும் இணைந்து எதிரிகளைத் தெறிக்கவிடும் காட்சி தியேட்டரில் கைதட்டலை அள்ளுகிறது.
வில்லனாக பஹத் பாசில். டெக்னாலஜியைப் பயன்படுத்தி தந்தையின் செல்வாக்கின் உதவியோடு தகவல் தொழில்நுட்பங்களைத் திருடி அதன் மூலம் ஆதாயம் அடைய நினைக்கும் மகனாக தன்னைச் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. அதேசமயம் அவரது ஆரம்பம் ஒரு விமான பைலட்டாக இருப்பதும், ஒரு கட்டத்தில் ஆகாயத்தில் சிக்கிக்கொண்ட அவரை மம்முட்டி காப்பாற்றும் காட்சி கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேல் நம்மை இருக்கை நுனியில் அமர வைத்து விடுகின்றன. அப்படிப்பட்ட கதாபாத்திரம் தடம் மாறியது எதனால் என்பதற்குச் சரியான பின்னணி காரணம் சொல்லப்படவில்லை என்பது ஒரு குறை.
பஹத் பாசிலின் நண்பராக அவரது நிறுவனத்தைக் கவனித்துக்கொள்ளும் முக்கியப் பொறுப்பில் நடித்துள்ள குஞ்சாக்கோ போபன், பஹத் பாசிலை விட அதிக காட்சிகளில் வருகிறார். படத்தின் கதையை நகர்த்தும் பொறுப்பு மம்முட்டிக்கு அடுத்ததாக இவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
வழக்கறிஞராக நயன்தாரா. இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறார். சொல்லப்போனால் அவராய் பார்த்த பிறகு தான் அவரும் இந்தப்படத்தில் இருக்கிறாரே என்கிற ஞாபகமே நமக்கு வருகிறது. விரல் விட்டு எண்ணிப் பார்த்தால் மொத்தம் நான்கு காட்சிகளில், 10 நிமிட நேரத்திற்குள்ளேயே அதேசமயம் கிளைமாக்ஸ் வரை தரிசனம் தந்து விட்டுப் போய்விடுகிறார். இறுதிக்காட்சியில் எதிர் தரப்பு வழக்கறிஞரை ஒரு அதட்டல் போடும்போது மட்டும் தான் 'அறம்' நயன்தாரா எட்டி பார்க்கிறார். அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத இந்தக் கதாபாத்திரத்தில் நயன்தாரா எதற்கு என்கிற கேள்வி நிச்சயமாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் எழும்.
'விடுதலை' படத்திற்குப் பிறகு மிரட்டலான இன்னொரு கதாபாத்திரத்தில் மத்திய அமைச்சராக ராஜீவ் மேனன். இவருக்கும் இவரது மகன் பஹத் பாசிலுக்கும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திர பெயர்களைப் பார்க்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரை குறிப்பிடுவது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. ஆனாலும் அந்த ஹைடெக் வில்லத்தனத்தை மிக லாவகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ராஜீவ் மேனன்.
குஞ்சாக்கோ போபனின் காதலியாக, துருதுரு பெண்ணாக வரும் தர்ஷனா ராஜேந்திரன் உண்மையை உலகத்திற்குச் சொல்கிறேன் என்று உயிரை விட்டுப் பரிதாபம் தேடிக்கொள்கிறார். இவர்களைத் தாண்டி மம்முட்டியின் இரண்டாவது மனைவியாக வெளிநாட்டில் அவருக்கு உதவி செய்பவராக நடித்திருக்கும் ஜரீனா வஹாப் அந்த கதாபாத்திரத்திற்கு ஏக பொருத்தம். ரேவதி படத்துவக்கத்தில் சில காட்சிகளே வந்தாலும் பாராளுமன்றத்தில் அத்தனை பேர் மத்தியில்சக அமைச்சரான ராஜீவ் மேனனை புன்னகைத்தபடி யாரும் அறியாமல் மிரட்டுவது கெத்து. அதே சமயம் நல்ல நடிகையான கிரேஸ் ஆண்டனியை வெறும் ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டும் தலை காட்டச் செய்து வீணடித்திருக்கிறார்கள். இவராவது பரவாயில்லை நடிகை ஷிவதாவுக்கு ஒரு நிமிடமே வந்துபோகும் ஒரே காட்சி மட்டும் தான்.
படத்தின் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன், வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளாக இருக்கட்டும் அல்லது கார் சேஸிங் காட்சிகளாக இருக்கட்டும், தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார். குறிப்பாக விமானத்திற்குள் நடக்கும் சண்டைக் காட்சியையும் லிப்ட்டுக்குள் நடக்கும் சண்டைக் காட்சியையும் அவர் படமாக்கிய விதம் செம த்ரில்லிங்.. அவரது உழைப்புக்கு ஈடு கொடுத்து ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாகப் பின்னணி இசையில் கை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம்.
படத்தின் இயக்குனரான மகேஷ் நாராயணன், தானே ஒரு படத்தொகுப்பாளர் என்றாலும் ராகுல் ராதாகிருஷ்ணன் என்பவருடன் இணைந்து படத்தைத் துரிதமாக நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார். அதேசமயம் ஒரு இயக்குனராக சில காட்சிகளை அவர் விரும்பி எடுத்திருந்தாலும், ஒரு படத்தொகுப்பாளராக மாறும்போது சில காட்சிகளில் தாராளமாக கத்தரி போட்டிருக்கலாம். குறிப்பாக தர்ஷனா ராஜேந்திரன் - குஞ்சாக்கோ போபன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், மம்முட்டி யூடியூபராக மாறிய பிறகு அதற்காகவே திணிக்கப்பட்ட சில காட்சிகள் என தாராளமாக 15-லிருந்து 20 நிமிட காட்சிகளை வெட்டியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும்.
டெக்னாலஜி மூலம் தகவல்கள் எப்படித் திருடப்படுகின்றன, மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் லேப்டாப் போன்றவற்றின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் தொழில்நுட்ப மோசடி ஆகியவை குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் மகேஷ் நாராயணன். படம். பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் தனது நண்பர்களிடம் “தாராளமாக நீங்களும் பாருங்கள்" என்று ரெக்கமெண்ட் செய்வார்கள் என்பது நிச்சயம்.
பேட்ரியாட் - ராயல் சல்யூட்