மக்கள் தலைவா
தயாரிப்பு : கவிதாலயா சரவணன்
இயக்கம் : ராம்தேவ்
நடிப்பு : ரவிமரியா, ராதாரவி, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, ராதாரவி
ஒளிப்பதிவு : கார்த்திக்
இசை : துளசிராமன்
வெளியான தேதி : ஜூன் 19, 2026
நேரம் : 1 மணிநேரம் 50 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
பல படங்களில் காமெடியனாக, குணசித்திர வேடங்களில் நடித்த ரவி மரியா கதை நாயனாக ஆகியிருக்கும் படம். காமெடி, அரசியல் சட்டயர் கலந்த கதை. பெரும் தொழிலதிபரான ராதாரவி இன்றைய அரசியல், அரசியல் தலைவர்கள் மீது கோபம் கொள்கிறார். போலி போராட்டங்கள் நடத்தி பணம் பறிக்கும் ரவி மரியாவை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார். தனது அரசியல் செல்வாக்கால் அவரை சினிமா ஹீரோ ஆக்கிறார். அடுத்து உள்ளே வெளியே என்ற அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் தலைவர் ஆக்குகிறார். தனது பணம், புத்திசாலிதனத்தால் அந்த கட்சியை ஜெயிக்க வைக்கிறார். ஆனால், ரவி மரியாவை முதல்வர் ஆக்கவில்லை. அது ஏன்?. வேறு யார் முதல்வர் ஆனார் என்பது மக்கள் தலைவா கதை.
அப்பாவிதனமான கேரக்டரில், அரசியல்வாதியாக, நடிகராக ஓரளவு நடித்து இருக்கிறார் ரவி மரியா. ஆனாலும் பல இடங்களில் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன் கொடுப்பது, சில இடங்களில் காமெடி செட் ஆகாதது போரடிக்கிறது. அவருடன் வரும் கஞ்சா கருப்பு எந்த இடத்திலும் சிரிக்க வைக்கவில்லை. அரசியல்வாதியாக வரும் பழ.கருப்பையா பண்பட்ட நடிப்பை தந்து இருக்கிறார். அமைச்சரான அவர் அலட்சிய பேட்டி, பேச்சு பல நிஜ அரசியல்வாதிகளை நினைவுபடுத்துகிறது. நாஞ்சில் சம்பத்தும் இருக்கிறார். அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம். டாஸ்மாக்கில் ரூ 10 ரூபாய் அதிகம் வாங்குவதை கண்டிக்கும் மது பிரியராக இயக்குனர் பேரரசு வருகிறார். சில நிமிடத்தில் காணாமல் போய்விடுகிறார். அவரையும் ஊறுகாய் மாதிரி பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட கே ரக்டர் இருந்தாலும் எந்த இடத்திலும் யாரும் மனதில் நிற்கவில்லை. எல்லாமே அரைகுறையாக இருக்கிறது.
அரசியல் சட்டையர் படம் என்பதால் பல கேரக்டர், பலரை நினைவுப்படுத்துகின்றன. பல சீன்கள், பல சம்பவங்களை சொல்லாமல் சொல்கின்றன. சில வசனங்கள் மூலம் இது அதுவாச்சே என்ற நினைப்பு வருகிறது. பல அரசியல் தலைவர்களின் காமெடிகளை, சுயநலத்தை சொல்ல நினைத்து சீன் வைத்த இயக்குனர் அது சரியாக தெளிவாக சொல்லவில்லை. எதுவும் அழுத்தமாக, ஜனரஞ்சகமாக சொல்லப்படவில்லை. கிளைமாக்ஸ் மட்டும் ஓரளவு ஓகே. ஒரு கவர்ச்சி பாடல் இருக்கிறது. அதுக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை.
கதைநாயகனாக நடித்த ரவி மரியா கிளைமாக்ஸால் தனதுக்கு பிரச்னை வரும் என்று நினைத்தாரோ என்னவோ, அவரை கடைசியில் காணவில்லை. ராதாரவி நடிப்பும், அவரின் திட்டங்களும், அவர் கேரக்டர் பின்னணி மட்டுமே படத்தில் வரும் உருப்படியான விஷயம். கடைசியில் இயக்குனரே ஒரு பைத்தியகார முதல்வராக வருகிறார். அந்த காட்சிகள், அவர் நடிப்பு ஒட்டு மொத்த ஜனநாயகத்தை கேலி செய்கிறது. ஒரு மனநலம் சரியில்லாதவர் முதல்வர் என்பதை எப்படி விட்டார்களோ?
ஏதோ சொல்ல நினைத்து, எதையோ எடுத்து இருக்கிறார் இயக்குனர் ராம் தேவ். அதிலும் கிளைமாக்ஸ் அவரின் தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், மக்களை, அவர்களின் ஜனநாயக கடமையை ரொம்பவே இழிவுப்படுத்துகிறது. படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார்கள் அல்லது அரசியல் விஷயங்கள், போராட்டங்கள் இழு, இழுவென இழுக்கிறது. பாடல், ஒளிப்பதிவில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. தேர்தல் நேரத்தில் வந்திருந்தால் கொஞ்சம் பேசப்பட்டு இருக்கும். இப்போது நேரமும், பணமும் வேஸ்ட் என் நிலையில் இருக்கிறது.
மக்கள் தலைவா.... மனநலம் சரியில்லாதவர் மாநிலத்தின் முதல்வர்... என்ன சொல்ல வர்றீங்க?!