உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / டார்க் ஜெயன்ட்

டார்க் ஜெயன்ட்

தயாரிப்பு : பயோவன் கிரியேஷனிசம்
இயக்கம் : கே.எஸ்.கிஷான்
நடிப்பு : ஆதர்ஷ் மதிகாந்த், ஜோவிதா, பாக்யராஜ், லிவிங்ஸ்டன், கீர்த்தி
ஒளிப்பதிவு : சங்கீத் மணிகோபால்
இசை : விக்னேஷ்ராஜா
வெளியான தேதி : ஜூன் 19, 2026
நேரம் : 2 மணிநேரம் 16 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

சென்னையில் வசிக்கும் ஆதர்ஷ் மதிகாந்த் கடன் பிரச்னையில் சிக்கி தவிக்கிறார். அவருக்கு கடன் கொடுத்த அமுதவாணன் பிரஷர் கொடுக்க, மனைவி மற்றும் தங்கையுடன் கோவை அருகே உள்ள தாத்தா வீட்டுக்கு சென்று அங்குள்ள வீடு நிலங்களை விற்க ஏற்பாடு செய்கிறார். படுத்த படுக்கையாக இருக்கிறார் தாத்தா. ஆதர்ஷ், அவர் மனைவி , தங்கையுடன் அவர் பேச மறுக்கிறார். அந்த சமயத்தில் அந்த வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. ஆதர்ஷ் மனநிலை பாதிக்கப்படுகிறது. அந்த வீட்டில் நரபலிக்காக ஏற்பாடுகள் நடக்கிறது. அதன் பின்னணி என்ன? ஆதர்ஷ் குடும்பத்தினர் தப்பித்தார்களா? அந்த தாத்தா யார் என்பது டார்க் ஜெயன்ட் கதை

ஆதர்ஷ் குடும்ப பிரச்னை, கடன், மனக்கவலை என கொஞ்சநேரம் வழக்கமான படமாக டார்க் ஜெயன்ட் நகர்கிறது. அந்த குடும்பம் கிராமத்துக்கு வந்துவுடன், அங்கே நடக்கும் சில சம்பவங்களால் கதை சூடுபிடிக்கிறது. அந்த கிராமத்தில் நடக்கும் விஷயங்கள், வீட்டில் நடக்கும் புரியாத விஷயங்கள், வீட்டுக்கு வரும் நபர்கள், கடைசியில் அந்த பூஜை என விறுவிறுப்பு அடைகிறது திரைக்கதை. பிளாஷ்பேக்கில் அந்த சாத்தான் யார்? என்ன செய்கிறது. எப்படி அந்த தாத்தா மனம் மாறினார் என சொல்கிறார்கள்.

முதலில் மெதுவாக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் வேகம் அடைகிறது திரைக்கதை. கதைநாயகனாக நடித்த ஆதர்ஷ் ரொம்பவே அமைதியாக, எதையோ இழந்தவர் போலவே நடித்து இருக்கிறார். அவருக்கு கெட்அப் செட்டாகவில்லை. மனநிலை மாறுகிற இடத்தில் மட்டும் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்.
அவர் மனைவியாக வரும் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா பல இடங்களில் நல்ல நடிப்பை தருகிறார். கணவனின் நிலை பார்த்து பதறும் இடங்களில், கிளைமாக்ஸ் பூஜையில் பயந்து நடுங்க வைக்கிறார். ஹீரோ தங்கையாக வரும் கீர்த்திர் துறுதுறுவென இருக்கிறார். அவருக்கான காதல் போர்ஷன்தான் படத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் பகுதி. ஒரு போலீஸ்காரர் கேரக்டர் வருகிறது. அமுதவாணன் அடுத்து அந்த வீட்டுக்கு வருகிறார். அந்த இடங்களில் புதுமை இல்லை.

கவுரவ வேடத்தில் அம்மாவாக வருகிறார் சோனியா அகர்வால். கொஞ்சம் வந்தாலும் அவர் நடிப்பு, அவரின் தியாகம், அம்மா பாசம் உருக வைக்கிறது. பணத்தாசை பிடித்த மனிதராக அருவி மதனும் ஓரளவு மனதில் நிற்கிறார். அந்த கெட்ட சாத்தான் அடிமையாக, நரபலி கொடுக்க துடிப்பவராக வரும் அந்த பெரியவர்தான் அனைவரைவிட கொடூரமான நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவரின் வயதான கெட்அப், அவர் செய்யும் செயல்கள், கிளைமாக்சில் நடந்து கொள்ளும்விதம் பயத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும், படத்தை டக்கென முடிக்காமல் அடுத்த பாகம், அது, இது என படத்தை இழுத்து இருப்பது அயற்சி. கிளைமாக்சில் தீர்வு சொல்லும் சாமியராக பாக்யராஜ், அதற்கு முந்தைய இடத்தில் ஹீரோவுக்கு அட்வைஸ் செய்யும் இடத்தில் லிவிங்ஸ்டன் வருகிறார்கள். இருவரையும் இயக்குனர் சரி வர பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. அந்த காட்சிகளில் வலு இல்லை.

சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவும் விக்னேஷ் ராஜாவின் இசையும் கதைக்கு ஓரளவு வலு சேர்த்து இருக்கிறது. புதுமுகங்கள் அதிகம் நடித்து இருப்பதும், மெதுவாக நகரும் திரைக்கதையும், குழப்பான சில விஷயங்களும் திரில்லர் அனுபவத்தை தர மறுக்கின்றன. கெட்ட சாத்தான், நரபலி, கிராமம், அம்மா பாசம், காதல் என பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு முழுமையான திகில் உணர்வை படம் தரவில்லை.

டார்க் ஜெயன்ட் : நரபலி சம்பந்தப்பட்ட கதை, நிறைவை தரவில்லை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !