ஹார்ட்டின்
தயாரிப்பு : ஸ்டெப் ஒன் ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் : கிஷோர் குமார். எஸ்.
நடிப்பு : சனந்த், மடோனா செபாஸ்டியான், இமயா, வாட்ஸ் ஆப் மணி, உமா பத்மநாபன், பிரகதி
ஒளிப்பதிவு : முகேஷ்
இசை : ராஜேஷ் முருகேசன்
வெளியான தேதி : ஜூன் 26, 2026
நேரம் : 1 மணிநேரம் 59 நிமிடம்
ரேட்டிங் : 2.25 / 5
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தமிழ் ஓட்டல் நடத்தும் ஹீரோ சனந்த்துடன் நட்பாகிறார் அங்கே ஐடியில் வேலை பார்க்கும் ஹீரோயின் இமயா . ஒரு கட்டத்தில் அந்த நட்பு, காதலாக மலர்கிறது. இருவரும் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து தமிழகம் வருகிறார்கள் .அப்போது நடந்த ஒரு விபத்தில் சில ஆண்டுகால நினைவுகளை மட்டும் மறக்கிறார் சனந்த். அதாவது இமயாவை காதலித்தது, ராஜஸ்தான் சம்பவங்கள் மறந்து போகின்றன. அதே சமயம் தனது கல்லூரி காதலி மடோனா செபாஸ்டியானை தேடி, பழைய நினைவில் ஊட்டிக்கு செல்கிறார். அவருடன் இமயாவும் செல்ல, அங்கே பல விஷயங்கள் நடக்கின்றன கடைசியில் எந்த ஜோடி ஒன்றிணைந்தது என்பது ஹார்ட்டின் கதை.
ஒரு முக்கோண காதல் கதையை விபத்து, ஞாபகம் மறதி கலந்து கொஞ்சம் புதுமையாக கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் கிஷோர் குமார்.
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் தொடங்கும் கதையும் காட்சிகளும் அவ்வளவு அழகு. ராஜஸ்தான் கோட்டைகள், நகர பின்புலத்தில் பல காட்சிகள் வருகின்றன. தனது நண்பர் whatsapp மணியுடன் சேர்ந்து ஓட்டல் நடத்தும் ஹீரோ. அங்கே சாப்பிட வரும் ஹீரோயின், அவரின் தோழிகள், நட்பு ,காதல் என முதல் பாதி கொஞ்சம் கலர்புல்லாக யூத் புல்லாக நகர்கிறது. ஆனாலும் அதில் புதுமை இல்லை. சனந்த்துக்கு ஏற்படும் விபத்து காரணமாக இரண்டாவது பாதி பெரும்பாலும், மடோனா வசிக்கும் ஊட்டியில் நடக்கிறது. அதில் ஹீரோ இரண்டு ஹீரோயின்களின் காதல் மோதல் எமோஷன் என கதை வேறு திசைக்கு பயணிக்கிறது
சில படங்களில் சின்ன ரோலில் நடித்த சனந்த் இதில் ஹீரோ ஆகியிருக்கிறார். முதல் பாதியில் இறுக்கமாக வருபவர் காதல் மலர்ந்த பின் கொஞ்சம் கலகலப்பாகிறார். இரண்டாம் பாதியில் ஞாபகம் மறதி, பழைய நினைவு என வேறு வகை நடிப்பை தந்திருக்கிறார் கிளைமாக்சில் அவர் நடிப்பு ஓகே ரகம். காதல் உள்ளிட்ட முக்கியமான காட்சிகளில் இன்னும் சிறப்பான நடிப்பை தந்திருக்கலாம். காதல் படமாக இருந்தாலும் அவருக்கு அழகான காதல் பாடல்கள் பெரிய அளவில் இல்லாதது வருத்தம். ஆக் ஷன் இல்லாதது சந்தோசமே
கதையை நகர்த்தி செல்பவராக, கதையின் நாயகியாக வருபவர் இமயா. இவர் முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள். ஐடி ஊழியராக, தோழியாக, காதலியாக ஒரு கட்டத்தில் தனது காதலுக்காக போராடுபவராக நல்ல நடிப்பை தந்திருக்கிறார். சில எமோஷன் காட்சிகளில் க்யூட்டான எக்ஸ்பிரஷனை தந்து இருக்கிறார். சினிமா ஹீரோயின் போல் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போல இயல்பாக எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
சனந்த் கல்லூரி தோழியாக அவரின் முன்னாள் காதலியாக வரும் மடோனாவின் காஸ்டியூம் அவர் ஸ்டைலான நடிப்பு அவ்வளவு அழகு. காதலுக்கு பிரேக் அப் சொல்லும் போது அவர் அழுவது டச்சிங். இரண்டாம் பாதியிலும் வருகிறார் ஆனால் முக்கியமான இடங்களில் ஸ்கோர் செய்ய முடியாமல் தவிக்கிறார் அவர் சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் போர்ஷனும் டக்கென்று முடிவது ஏமாற்றம்.
ஹீரோ நண்பராக வரும் வாட்ஸ் ஆப் மணி தான் சம்பந்தப்பட்ட காமெடி சீன்களில் ஓரளவு உற்சாகம் ஊட்டுகிறார். அவரையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. ஹீரோ அம்மாவாக சில காட்சிகளில் வந்தாலும்முன்னாள் ஹீரோயின் பிரகதி கலக்குகிறார். அவரும் காணாமல் போய்விடுகிறார். மற்றபடி நடிப்பில் சொல்லிக் கொள்ளும் படி யாரும் இல்லை.
ஹீரோ, இரண்டு ஹீரோயின்களை மட்டுமே சுற்றி சுற்றி கதை நகர்வதும், அதில் புது விஷயங்கள், திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், இல்லாததும் போர் அடிக்க வைக்கிறது.
பிரேமம் புகழ் ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை, சில பாடல் ஓகே ஆனால் எதிர்பார்த்தது நிறைய அதிலும் அவர் ஏமாற்றி இருக்கிறார்.
எதற்காக சனந்தை மடோனா பிரிந்தார் என்பதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை. கிளைமாக்சிலும் அவர் போர்ஷன் முழுமை அடையாமல் இருக்கிறது. இமயா, காதல், கோபம் சண்டைகள் பல படங்களில் பார்த்தது. விபத்து, ஞாபகம் மறதி, இரண்டு காதலிகள் என்பது போன்ற கதைகள் 20 ,30 ஆண்டுகளுக்கு முந்தைய பாணி. அதை தூசி தட்டி எடுத்து கொஞ்சம் மசாலா போட்டு கொடுத்திருக்கிறார் இயக்குனர். எப்படியும் இவர் தான் ஹீரோவுடன் சேரப் போகிறார் என்ற உணர்வு பார்வையாளருக்கு முன்பே வந்து விடுவது திரைக்கதை வீக். காதல் சம்பந்தப்பட்ட கதையாக ஹார்ட்டின் இருந்தாலும் மனதோடு ஒட்டவில்லை
ஹார்ட்டின் - ‛வீக்' ஆன காதல்